பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் பணிகள் நிறைவு

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் பணிகள் நிறைவு
கணவருடன் அனிதா ரஞ்சித்

பா.ரஞ்சித் தயாரித்து இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பா.ரஞ்சித் என்றாலே சமூக, அரசியல்தான் கதைக்களமாக இருக்கும். அந்த வகையில் தன்னுடைய எல்லா படங்களிலும் சூடான அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களை பரிமாறி வருகிறார். ஆனால், பா.ரஞ்சித்தின் அரசியல் படங்களுக்கு அப்பால், அவரது காதல் கதைகளுக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. அவரது அனைத்து படங்களிலும் வருடலான காதல் கதை இழையோடியிருக்கும் என்றாலும், அட்டக்கத்தி பாணியிலான இன்னொரு திரைப்படத்டை பா.ரஞ்சித் எப்போது தருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதற்கு விடையளிப்பது போல, சார்பட்டா வெற்றியின் மத்தியில் சத்தமில்லாது 'நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் பா.ரஞ்சித். முழுக்கவும் காதல் கதை என்பதால் தனது வழக்கான அணிக்கு விடை கொடுத்து, புதிய கலைஞர்களை திரட்டினார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வைக்கும் ஏற்பாட்டில் தொடங்கிய திரைப்படம், பின்னர் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், சார்பட்டா நாயகி துஷரா விஜயன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் முடிவானார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது படக்குழு
நட்சத்திரம் நகர்கிறது படக்குழு

’காஸ்ட்லஸ் கலெக்டிவ்’ குழு மூலம் பிரபலமானவரும், பா.ரஞ்சித் தயாரித்த ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்கு இசையமைத்தவருமான தென்மா, ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதே திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் இந்த திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

இவர்களுக்கு அப்பால் இன்னொரு புதுமுகக் கலைஞரையும் ’நட்சத்திரம் நகர்கிறது’ மூலம் அறிமுகம் செய்திருக்கிறார் பா.ரஞ்சித். இவரது மனைவி அனிதா இந்த திரைப்படம் மூலமாக காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகிறார்.

நட்சத்திரம் நகர்கிறது படக்குழு
நட்சத்திரம் நகர்கிறது படக்குழு

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை முன்னிட்டு, படப்பிடிப்பு தளத்தில் நேற்று(ஜன.5) கேக் வெட்டி படக்குழுவினர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அனிதா ரஞ்சித், தனக்கான புதிய வாய்ப்புக்கு கணவருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in