
பிக்பாஸ் அரங்கிலிருந்து ஜிபி முத்து வெளியேறிய நிலையில், அவருக்கு ஆதரவான கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமான ஜி.பி. முத்துவை ரசிகர் கொண்டாடி வருகிறார்கள். ‘ஆதாமா… அவர் யாரு?’, ‘எனக்கு இங்கிலீஸ் தெரியாது.’ ‘நான் நடிக்கிறேனா?’ என அவர் தெறிக்க விட்ட வசனங்கள் ஏராளம். 14 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஜி.பி. முத்து பிக்பாஸ் அரங்கை விட்டு வெளியேறினார். அப்போது தனக்குக் குழந்தைகள் நினைவாகவே உள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக அவர் தெரிவித்தார். ஜி.பி. முத்து ‘காசு பணத்தை விட எனக்குப் பிள்ளைதான் முக்கியம் எனப் பேசியிருப்பது பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவரை சமாதானம் செய்ய கமல்ஹாசன் முயன்றும் பலனில்லை. அதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இதற்கு முந்தைய சீசனில் வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தது போல ஜி.பி. முத்துவும் வர வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி. முத்துவிற்கு நாள் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். அவர் கலந்து கொண்ட 14 நாட்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கேள்விப்பட்ட ஜி.பி. முத்து ஆர்மியினர், எங்க தலைவனுக்கு குறைவாக சம்பளம் கொடுத்துள்ளார்களே என ஆதங்கமாகப் பதிவு செய்துள்ளார்கள். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி பெறத் தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காகப் புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ் மகன் ஜி.பி. முத்துதான் வெற்றி நாயகன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்குத் திரும்ப சென்ற ஜி.பி. முத்து தனது குழந்தைகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொடுத்து, அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.