’நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதே ஒரே நோக்கம்’

நாசர், பூச்சி முருகன், கார்த்தி, விஷால்
நாசர், பூச்சி முருகன், கார்த்தி, விஷால்

``நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதே தங்களுடைய ஒரே நோக்கம்'' என்று அந்தச் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்வான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. இதில், தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதையடுத்து, தலைவர் நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், பூச்சி முருகன், விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக அளித்தப் பேட்டியில் கூறியதாவது:

நாசர், பூச்சி முருகன், கார்த்தி, விஷால்
நாசர், பூச்சி முருகன், கார்த்தி, விஷால்

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கும். கட்டிடத்துக்கு போடப்பட்ட பட்ஜெட் இப்போது 30 சதவிகிதம் அதிகரித்து விட்டது. இதுவரை 60 சதவிகித வேலைகள் மட்டுமே முடிவடைந்திருக்கிறது. இன்னும் ரூ.21 கோடி தேவைப்படுகிறது. அதற்கான நிதியை எப்படி பெறுவது என்பது குறித்து செயற் குழுவில் பேசி முடிவெடுக்க இருக்கிறோம். எல்லோரிடமும் நிதி கேட்க இருக்கிறோம். தமிழக அரசிடமும் உதவி கேட்க இருக்கிறோம்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதை எதிர்த்து யார் நீதிமன்றம் சென்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. அனைவரும் இணைந்தே பயணிப்போம். நடிகர், நடிகைகள் பற்றி சில யூடியூப் சேனல்களில் தவறாக பேசிவருவதாகக் கூறுகிறார்கள். அதுபற்றி புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள் மூலம் படங்களுக்கு வரும் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்கப்பட்டது. அப்போது, ‘கண்டிப்பாக நடிகர்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம். சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்று பூச்சி முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in