இந்த வார ஓடிடி... ‘காலா பானி’, ’தி நன் 2’ மற்றும் ‘பர்மனென்ட் ரூம்மேட்ஸ்’

காலா பானி - பர்மனென்ட் ரூம்மேட்ஸ்
காலா பானி - பர்மனென்ட் ரூம்மேட்ஸ்

இந்த வாரம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களின் வரிசையில் ’காலா பானி’, ’பர்மனென்ட் ரூம்மேட்ஸ்-3’ என 2 வலைத்தொடர்கள் மற்றும் ’தி நன்-2’ என்ற திகில் திரைப்படம் ஆகியவை குறித்து இங்கே பார்க்கலாம்.

காலா பானி

அழகான அந்தமான் நிகோபர் தீவுகளில், அடுத்த சில வருடங்கள் கழித்தான எதிர்காலத்தில் கதை நடக்கிறது. திடீரென அங்குள்ள சுமார் 5 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து எழுகிறது. தீவை சிறையாக்கி சுற்றியிருக்கும் தண்ணீரே மதிலாக மக்களை முடக்கிப் போடுகிறது. அங்கு வசிப்போர் மற்றும் ஆதிவாசிகள் மட்டுமன்றி, சில காரணங்களுக்காக அந்தமானுக்கு சென்ற வேறு சிலரும் மரண பயத்தை எதிர்கொள்கின்றனர்.

வலிமையுள்ளது மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்பதால் அவர்களில் சிலர் சவாலை எதிர்கொண்டு தங்கள் வாழ்வா சாவா போராட்டத்தை தொடங்குகின்றனர். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் ’காலா பானி’ இந்தி வலைத்தொடரை தமிழிலும் பார்க்கலாம். அக்.18 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காலா பானி வெளியாகி உள்ளது.

தி நன் 2

திகில் படங்களை ரசிப்பதில் தணியாத ஆர்வமும், துணிச்சலும் கொண்டவர்களுக்காக வந்திருக்கிறது ’தி நன் 2’. தி கான்ஜுரிங் (The Conjuring) யுனிவர்ஸ் வரிசையில் அடுத்த தவணையாக கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான தி நன் 2, தற்போது கட்டண ஓடிடிக்கு வந்திருக்கிறது. தி கான்ஜுரிங் திரைப்படத்தின் 2 பாகங்கள், தி நன் முதல் பாகம் ஆகியவற்றை ரசித்தவர்கள் தவற விடக்கூடாத பேய் படம் இது.

ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைத்து பயமுறுத்தி அலற வைப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த திகில் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் மட்டுமன்றி ஒளியமைப்பு மற்றும் பின்னணி இசையில் இந்த பயமுறுத்தலுக்காக தனியாக மெனக்கிட்டிருக்கிறார்கள். முந்தைய பாகமான தி நன் அளவுக்கு இல்லாவிடினும், திகில் ரசனையில் பழுதில்லை. புக்மைஷோ ஸ்ட்ரீமிங் தளத்தில் கட்டண அடிப்படையில் இந்த திரைப்படத்தைக் காணலாம்.

பர்மனென்ட் ரூம் மேட்ஸ் -3

இளம் காதல் ஜோடிகள்; அவர்கள் இடையிலான காதலும் மோதலுமான கலாட்டாக்கள். இந்த வகைமையில் சர்வதேசளவில் பிரபலமான ரொமாண்டிக் காமெடி தொடர்களின் இந்திய பதிப்பிலானவை எல்லா ஓடிடி தளங்களிலும் உண்டு. நெட்ஃபிளிக்ஸில் ’லிட்டில் திங்க்ஸ்’ என்றால், அமேசான் பிரைமில் ’பர்மனென்ட் ரூம் மேட்ஸ்’. இந்த வலைத்தொடரின் மூன்றாவது சீஸன், அக்.18 அன்று வெளியாகி இருக்கிறது.

தன்யா - முகேஷ் என இளம்சோடியில் அழகான அட்டகாசங்களை அத்தியாயம் தோறும் படையல் வைத்திருக்கிறார்கள். வழக்கமாக ஊடல் கூடல்களுக்கு இடையே கொஞ்சமாய் கதையும், ஒரு சில திருப்பங்களையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த முறை தன்யா தனது பணி நிமித்தமான ஜாகையை இந்தியாவுக்கு வெளியே தீர்மானிக்க, முகேஷ் இங்கேயே இருக்கலாம் என பிடிவாதம் பிடிக்க... இருவருக்கும் இடையிலான புதிய களேபரங்கள் இந்த சீஸனின் உச்சமாக வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in