கல்லூரி நாட்களைத் திரும்பிப் பார்க்கும் உணர்வை இந்த சீரிஸ் தரும்!

ஓடிடி சீரிஸ் நாயகி சரண்யா பேட்டி
சரண்யா
சரண்யா

இயக்குநர் வசந்தபாலனின் ‘ஜெயில்’, அஜித்தின் ‘வலிமை’ என வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை சரண்யா. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு ஆர்ப்பாட்டமில்லாத நடிகை. இப்போது ஓடிடி சீரிஸ் பக்கம் ரொம்பவே பிசியாக இருக்கும் சரண்யா, படப்பிடிப்புக்கு நடுவே காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

‘ஜெயில்’, ‘வலிமை’ என அடுத்தடுத்து முக்கிய படங்களில் இருக்கீங்க. இப்போ கைவசம் வேறென்ன படங்கள் இருக்கு?

இந்தியில் வெளியான பிரபலமான ஓடிடி தொடர் ஒன்றை இப்போது தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சீனு ராமசாமியின் உதவி இயக்குநர் இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். இந்தி ரீமேக் ஓடிடி தொடரின் படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது. நம் கல்லூரி வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வை இந்த சீரிஸ் நிச்சயம் தரும்.

‘வலிமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?

’வலிமை’ படத்துக்கான நடிகர்கள் தேர்வு மூலமாகத்தான் என்னை தேர்வு செய்தார்கள். அந்தப் படத்தில் நான் அழுவது போன்ற காட்சியில் நடித்த போது என் நடிப்பைப் பார்த்துவிட்டு “நீ தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாமா?” என்று மைக்கில் கத்தி கேட்டார் அஜித் சார். எப்படி அதைக் கண்டுபிடித்தார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். “நானெல்லாம் 15 டேக்குக்கு மேல் வாங்குவேன். நீங்கள் மூன்று டேக்கிலேயே முடித்து விடுகிறீர்கள்” என்று சார் பாராட்டினார். அவருடன் நடித்த ‘வலிமை’ திரைப்படம் என்னை இன்னும் பல பேரிடம் கொண்டு போய் சேர்த்தது என்பது தான் உண்மை.

சினிமாவில் எளிதாக அனைவருக்கும் வாய்ப்பு அமைந்துவிடாது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டி இருக்கும். உங்கள் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது?

எனக்கு ஆரம்ப நாட்களில் சினிமா மீது பெரிதாக ஆர்வம் இல்லை. அதிகமாக தாழ்வு மனப்பான்மை கொண்டவள் நான். கல்லூரி முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் தான் என்னை சினிமாவில் முயற்சி செய்யச் சொன்னார்கள். நானும் எதோ ஒரு நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டேன். குடும்பத்தை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருந்த சூழலில் எந்த ஒரு சினிமா தொடர்பும் இல்லாமல் எந்த நம்பிக்கையில் அந்த வேலையை விட்டேன் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

தொடக்கத்தில் குறும்படங்கள் பிறகு சினிமா என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். நிறத்தால் பல அவமானங்களைச் சந்தித்து நிராகரிக்கப் பட்டிருக்கிறேன். ஆனால், அதையும் தாண்டி இத்தனை படங்கள் நடித்து எனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்றால் நிச்சயம் அது என் நடிப்பு என்பதை நம்புகிறேன். நடிப்புக்காக நான் மூன்று வருடங்கள் சிறப்பு வகுப்புக்குச் சென்றிருக்கிறேன். என் வேலையின் மீதான தொடர் முயற்சி, திறமை, உழைப்பு இதை எல்லாம் தீவிரமாக நம்புகிறேன். சினிமா எனக்கு தாய் வீடு போன்றது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், தினமும் என்னை அக்கறையாகப் பார்த்துக்கொண்டு சோறு போடுவது அது தான். ஆனாலும் இந்த சினிமா பயண, எனக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இத்தனை தடைகளையும் மீறி என்னையும் என் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு என் குடும்பமும் எனக்கான ஆதரவு கொடுத்து வருவது ஆறுதலான ஒன்று.

கடுமையாக உடற்பயிற்சிகள் செய்கிறீர்களே... உங்கள் தரப்பில் இருந்து உடற்பயிற்சி மற்றும் இந்த வெயில் காலத்தைச் சமாளிக்க ஏதாவது டிப்ஸ்?

அன்றாடம் நாம் நிறையச் சாப்பிடுவோம். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது என்பதையும் தாண்டி உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்புகள் போன்றவையும் நம் உடலில் சேரும். இதை எல்லாம் சமாளிக்க நாம் கலோரிகளை உடற்பயிற்சியின் மூலம் குறைப்பது அவசியம். அதனால் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது அடிப்படை உடற்பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து செய்யவேண்டியது முக்கியமான ஒன்று.

இப்போது வெயில் காலம் என்பதால் அதற்கும் சேர்த்தே சில டிப்ஸ் சொல்கிறேன். தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டியது அவசியம். இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் சரி, குளிக்காமல் உறங்கச் செல்லாதீர்கள். அதே போல, வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர் என அந்தந்த சீசனில் கிடைப்பதைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கட்டாயம் மூன்று லிட்டர் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த அளவு பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் சரியான நேரத்திற்கு தூங்கி எழ வேண்டும். இல்லை எனில், உடல் வெப்பம் நிச்சயம் அதிகரிக்கும். வெளியில் செல்லும் போது தலையையும் முகத்தையும் துணியால் மூடிக் கொண்டு போவது நல்லது. வெயிலும், தூசியும் இந்த வெயில் காலத்தில் முகத்தையும் முடியையும் பயங்கரமாகப் பாதிக்கும் என்பதால் இதைச் சொல்கிறேன்.

இவை எல்லாம் நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஆனால், எளிதான இந்த விஷயங்களைக்கூட பின்பற்றாமல் பலர் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தமான விஷயம். மழைக்காலத்தை விட வெயில் காலத்தில் நம் சருமமும் உடல் நலனும் அதிகம் பாதிப்படையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சினிமா மட்டும் தான் உங்களது கனவா? சின்னத்திரை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யவில்லையா?

ஏன் இல்லை, நிறைய வாய்ப்புகள் வந்தது. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ தொடரின் கதாநாயகி வாய்ப்பு முதலில் எனக்குத் தான் வந்தது. அதேபோல் ‘சரவணன் மீனாட்சி’ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், சீரியலில் நடிக்க பெரிதாக எனக்கு விருப்பமில்லை. சீரியல் உலகில் நுழைந்தால் 9 டு 9 வேலை ஆகி விடும். பிறகு சினிமாவில் கவனம் செலுத்த முடியாது. திருமணத்துக்குப் பிறகு வேண்டுமானால் ஒருவேளை சின்னத்திரை பக்கம் திரும்பிப் பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in