நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிய உத்தரவு: என்ன காரணம்?

நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிய உத்தரவு: என்ன காரணம்?

மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி வன்னியர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வந்தது. இதனிடையே, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குநர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் ருத்திர வன்னிய சேனா நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், நடிகர் சூர்யா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் படம் எடுத்துள்ளனர். தமிழ் பேசாத வடநாட்டு நபரை கன்னத்தில் அறையும் காட்சி மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

பச்சையம்மாள் என்ற பெயர் அந்த காலங்களில் வன்னியர்களுக்கு மட்டுமே வைக்கப்படும் நிலையில் அந்த பெயரை இருளர் சமூகத்தை சேர்ந்தவருக்கு பெயர் வைத்ததன் மூலம் எங்கள் சமூகத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தியது. எனவே நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் தயாரிப்பாளர் மீதான புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.