ஓடிடியில் புஷ்பா: சமந்தா வெளியிட்ட ‘ஊ...சொல்றியா’ ஒத்திகை

ஓடிடியில் புஷ்பா: சமந்தா வெளியிட்ட ‘ஊ...சொல்றியா’ ஒத்திகை

கரோனா கவலைகளுக்கு இடையே, சினிமா ரசிகர்களிடம் அண்மையில் ஊடாடி மகிழ்வித்த பாடல் ’ஊ... சொல்றியா’. திரையிசைப் பாடல்களில் ஒரு சிலது மட்டுமே, பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாகும். அந்த வரிசையில் ’ஊ..சொல்றியா’வும் சேர்ந்திருக்கிறது.

அல்லு அர்ஜூன், ரேஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சுகுமாறன் இயக்கத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் 'புஷ்பா'. டிச.17 அன்று இதன் தமிழ், கன்னட, இந்தி பதிப்புகளும் ஒரு சேர, நேரடியாக திரையரங்குகளில் வெளியாயின. கரோனா காரணமாக நொடித்திருந்த திரையரங்களுக்கு புஷ்பா உற்சாகம் தந்தது. இந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகி இருக்கிறது ’ஊ..சொல்றியா’ பாடல்.

’புஷ்பா’ நாயகியாக ரேஷ்மிகா இருக்கும்போது, ’ஊ..சொல்றியா’ ஒற்றைப் பாடலுக்கு நடனமாட சமந்தா நிரம்பவே தயங்கினார். ரங்கஸ்தலம் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஒற்றைப் பாடலுக்கு ஆடியதை உதாரணமாக்கியும், சுமார் ரூ.5 கோடிக்கு ஊதியத்தை உயர்த்தியும் சமந்தாவை சம்மதிக்கச் செய்தார்கள்.

பாடல் வரிகளுக்கு ஆண்கள் சங்கத்தினர் ஆட்சேபம் தெரிவித்தபோதும், சென்னை வெளியீட்டு மேடையில் தோன்றிய புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன், ஆண்களின் சார்பாக பாடலை விதந்தோதி, ஆட்சேபர்களை வாய்மூடச் செய்தார்.

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த புஷ்பா திரைப்படத்தை, இன்று முதல் ஓடிடியிலும் பார்க்கலாம். அதனையொட்டி ரசிகர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் புஷ்பா படக்குழு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. நடிகை சமந்தாவும் தன் பங்குக்கு ’ஊ..சொல்றியா’வின் தெலுங்கு மூலமான ‘ஊ..அன்டவா’ பாடலுக்கான நடன ஒத்திகையின் குறு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் ’ஊ..சொல்றியா’ பாடலுக்கான ஒத்திகையில் அயர்ந்துபோனார் சமந்தா. நாக சைதன்யாவுடனான பிரிவு, பொதுவெளியில் கேலி கிண்டல்கள் என சமந்தா சகல திசைகளிலும் கவனம் சிதறிய காலம் அது. தனது மனதை ஒருங்குவித்து, உற்சாகமாக அசைவுகளிட அதிகம் சிரமப்பட்டார். திரையரங்கில் சாதாரணமாக, ரசிகர்கள் விசிலடித்து கடந்து செல்லும் பாடலின் பின்னே எத்தனை உழைப்பு இருக்கிறது என்பதை சமந்தா, இந்த நடன ஒத்திகையில் பிரதிபலிக்கிறார்.

சமந்தா இனி அவ்வளவுதான் என்றவர்களை வாயடைக்கும் வகையில் ஒரு நடனமணியாக தனது உழைப்பைக் கொட்டியிருக்கிறார். சமந்தாவின் இன்னொரு இன்னிங்ஸுக்கு இந்தப் பாடல் கட்டியம் சொல்லியிருக்கிறது.

கரோனா காரணமாக திரையரங்கு செல்லாதவர்கள், ஊ..சொல்றியா பாடலுக்காகவேனும், அமேசான் பிரைம் வீடியோவில் இன்று(ஜன.7) இரவு 8 மணிக்கு தஞ்சமடையும் புஷ்பாவை தரிசிக்க காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in