ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் விருது கூட கிடைக்காது: கொந்தளித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ்ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் விருது கூட கிடைக்காது: கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை இயக்கிய டைரக்டர் இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை என்று கேட்டார். ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் வெளியாகி 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் 'பேஷ்ரம் ரங்' என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடித்ததுடன், காவி நிறம் கொண்ட உடை அணிந்திருந்ததால் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த படத்தைத் திரையிடக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். பாஜக அமைச்சர்கள் உள்பட பலர் இப்படத்தைப் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

ஆனால், அந்நேரத்தில் இப்படத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்தைத் தெரிவித்தார். அதில்," அருவருப்பாக இருக்கிறது . எவ்வளவு நாள் இந்த மாதிரியான வண்ணக்குருடை பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர், நடிகை தீபிகா படுகோன் கால்பந்து உலகக் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு , ” தீபிகா படுகோனேவை நினைத்து பெருமைப்படுகிறேன். பேஷ்ரம் ரங் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மதவெறியர்கள் இப்போது உலக கோப்பையை புறக்கணிப்பார்களா?” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் 'பதான்' திரைப்படம் திரைக்கு வந்து 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்," 'பதான்' படத்தை எதிர்த்தவர்களால் 'பிரதமர் நரேந்திர மோடி' படத்திற்கு 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியவில்லை . 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற பிரச்சாரப் படத்தை எடுத்தார்கள். அந்த படத்தைப் பார்த்து சர்வதேச கலைஞர்கள் காறித் துப்பினார்கள். அப்படியும் கூட இவர்களுக்கு புத்தியே வரவில்லை.' தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை இயக்கிய டைரக்டர் வேறு இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை என்று கேட்டார். ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச கடித திருவிழாவில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ், இதே கருத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்ட கருத்திற்கு எதிராக பாஜகவினர் ஆவேசமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in