ஹாலிவுட் சென்றது ஏன்? -நீது சந்திரா விளக்கம்

நீது சந்திரா
நீது சந்திரா

ஹாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றது ஏன் என்பது குறித்து, நடிகை நீது சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை நீது சந்திரா. ’யாவரும் நலம்’ படம் மூலம் தமிழுக்கு வந்த இவர், தொடர்ந்து அமீரின் ஆதி பகவன், ஆர்யாவின் சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் நடித்தார்.

பின்னர் இந்திப் படங்களில் கவனம் செலுத்திய அவர், இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர், நடித்த நெவர் பேக் டவுன் : ரிவோல்ட் (Never Back Down:Revolt) என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருந்தார் நீது சந்திரா. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ஹாலிவுட் தொடர்புக்கு மறைந்த நடிகர் இர்பான் கானும் காரணம் என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நீது சந்திரா
நீது சந்திரா

“2017-ம் ஆண்டு நான் நியூயார்க்கில் இருந்தபோது, இர்பான் கான் லண்டனில் படப்பிடிப்பில் இருந்தார். அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். ’என்னை இங்கு பிரேசிலைச் சேர்ந்தவள் என்றும் லெபனான், இத்தாலியைச் சேர்ந்தவள் என்றும் அழைக்கிறார்கள். அதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று என் அதிர்ஷ்டத்தை சோதிக்கப் போகிறேன்’ என்று கூறியிருந்தேன். அப்போது அவர்தான் அங்குள்ள ஏஜென்ட்களை தொடர்பு கொள்ள உதவி செய்தார். அவர்தான் இங்கு நான் வலுவாகக் காலூன்ற காரணம்.

ஹாலிவுட்டில் நான் நடிக்க வேண்டும் என்றால் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால், கடந்த சில வருடங்களாக அங்கு வசித்து வருகிறேன். நான் தற்காப்பு கலையைக் கற்றுள்ளதால், அதுபோன்ற படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்தியாவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் சர்வதேச அளவில் வாய்ப்புகளைத் தேடிச் சென்றேன்”. இவ்வாறு நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in