‘நீங்கள் நினைப்பது போல் அத்தனை எளிதல்ல சினிமா’ - நித்யா மேனன் பளிச்

‘நீங்கள் நினைப்பது போல் அத்தனை எளிதல்ல சினிமா’ - நித்யா மேனன் பளிச்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். கடைசியாக 2020-ல் தமிழில் நித்யா மேனனின் நடிப்பில் ‘சைக்கோ’ படம் வெளியானது. அவர் நடித்த ‘பீம்லா நாயக்’ எனும் தெலுங்குப் படமும், தமிழில் தனுஷூடன் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில், திரைக்கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது நண்பர் ஒருவர் எழுதிய இன்ஸ்டா பதிவை மறுபகிர்வு செய்திருக்கிறார் நித்யா மேனன்.

ஆங்கிலத்தில் கவித்துவ நடையுடன் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பதிவு, ‘சினிமாவில் இருக்கும் கலைஞர்கள் குறித்து பொதுவெளியில் நிறைய கருத்துகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில் அது அப்படி அல்ல. நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். எங்கள் வாழ்க்கை முழுக்கவே இந்த நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கும். எங்களுடைய வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள், ஏன் பல சமயங்களில் அதல பாதாளம்கூட இருக்கும்.

திடீரென அடுத்தடுத்த வெற்றிகளையும் பார்ப்போம்; தோல்விகளையும் ஒரே இரவில் சந்திப்போம். எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத இடத்தில் அமர்வோம், நிற்போம், எழுவோம், தூங்குவோம், பசிக்காக அலைவோம். இதெல்லாம் பல சமயங்களில் நன்றாகவும் இருக்கும்; பயமும் ஏற்படுத்தும். சீர்குலைந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமில்லாத திட்டமிடுதல்கள் என முறையற்ற வாழ்வு எங்களுடையது.

நாங்கள் இரவு, பகலாக, நாட்கணக்கில், வாரக்கணக்கில், குளிர், புயல், வெயில் என அனைத்து காலங்களிலும் நேரம் பார்க்காது வேலை செய்கிறோம். எங்கள் வீட்டைவிட்டு, குடும்பம், நண்பர்கள் என எங்களுக்கு பரிச்சயமான அனைத்தையும் விட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிறோம்’ என நீள்கிறது.

அந்தப் பதிவை வெளியிட்டிருக்கும் நித்யா மேனன், ‘இப்பதிவை என்னுடன் நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க முடிகிறது. அதனால்தான் இதை இங்கு மறுபகிர்வு செய்திருக்கிறேன்’ கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in