‘நித்தம் ஒரு வானம்' படத்தின் புத்தம் புதிய தகவல்கள்!

‘நித்தம் ஒரு வானம்' படத்தின் புத்தம் புதிய தகவல்கள்!

நடிகர் அசோக் செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபீஸின் வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் 'நித்தம் ஒரு வானம்'. ரா.கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் ரா.கார்த்திக் பேசுகையில், “தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். 'நித்தம் ஒரு வானம்' நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும், காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களைக் கொண்டாடும் வகையில் இப்படம் இருக்கும்.

அசோக் செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் கதையை மிகச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கின்றனர். இவர்களது கதாபாத்திரங்கள் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்" என்றார்.

மேலும், “நிறைய பாசிட்டிவான விஷயங்களைப் படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ‘ஃபீல் குட்’ படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில், திரையரங்குகளுக்குப் படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும்போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று உற்சாகமாகச் சொல்கிறார் ரா.கார்த்திக்.

'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் மூன்று வித்தியாசமான காலகட்டங்களில், சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வெவ்வேறு நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in