உள்ளம் கவர்கிறதா ‘நித்தம் ஒரு வானம்’?

உள்ளம் கவர்கிறதா ‘நித்தம் ஒரு வானம்’?

பயணத்தின் மூலம் வலிகளை மறந்து வாழ்க்கையை நேர்மைறையாக எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளும் நாயகனின் கதைதான் ’நித்தம் ஒருவானம்’.

உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் அர்ஜுன் (அசோக் செல்வன்) யாரிடமும் சகஜமாகப் பேசவோ பழகவோ இயலாதவனாகவும் அனைத்திலும் ஒழுங்கும் சுத்தமும் கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும் என்பதை அளவுக்கதிகமாக வலியுறுத்தும் ‘அப்ஸஸ்ஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர்’ (Obsessive-compulsive disorder) எனும் உளவியல் சிக்கல் கொண்டவனாகவும் இருக்கிறான். அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென்று அவனை விட்டுச் சென்றுவிடுவதால் மிகக் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான். அவனுடைய குடும்ப நண்பரான மருத்துவர் (அபிராமி) தான் எழுதிய இரண்டு கதைகளைப் படிக்கக் கொடுக்கிறார்.  அந்தக் கதைகளின் இறுதிப் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன.

எந்தக் கதையைப் படித்தாலும் அதன் முதன்மைக் கதாபாத்திரமாகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் வழக்கம்கொண்ட அர்ஜுன், இந்தக் கதைகளின் முடிவைத் தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான். அப்போது அவை இரண்டும் கற்பனைக் கதைகள் அல்ல, நிஜத்தில் வாழும் மனிதர்களின் கதைகள் என்றும் முதல் கதையில் வந்த வீரா- மீனாட்சி (அசோக் செல்வன் - சிவாத்மிகா) தற்போது கொல்கத்தாவிலும், இரண்டாம் கதையில் வந்த மதி - பிரபா (அபர்ணா பாலமுரளி - அசோக் செல்வன்) இமாச்சல பிரதேசத்திலும் வசிப்பதாகவும் கூறுகிறார் மருத்துவர். தேனிலவைக்கூட வீட்டுக்கு அருகில் இருக்கும் இடத்திலேயே திட்டமிடும் அளவுக்கு வெளியூர் பயணங்களை வெறுப்பவனான அர்ஜுன், தான் படித்த கதைகளின் முடிவைத் தெரிந்துகொள்ளும் உந்துதலில் தொலைத் தூரப் பயணத்துக்கு ஆயத்தமாகிறான்.

வழியில் அவனுடன் இணைந்துகொள்கிறாள் சுபத்ரா (ரிது வர்மா). காதல் முறிவை எதிர்கொண்டிருக்கும் சுபத்ரா அந்த வலியை வெளியே காண்பிக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ விரும்பும் நேர்மறைச் சிந்தனை கொண்ட பெண்ணாக இருக்கிறாள். இந்தப் பயணம் அர்ஜுனின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன, மன அழுத்தத்திலிருந்து பிற உளவியல் சிக்கல்களிலிருந்தும் அவனுக்கு விடுதலை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.    

வலிகளிலிருந்து மீள்வதற்கும், என்ன நடந்தாலும் வாழ்க்கையை நேர்மறைச் சிந்தனையுடன் வாழ்வதற்குமான நம்பிக்கை விதைகளை இப்படத்தின் மூலம் வழங்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக். பயணங்களும், சகமனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் பாடங்களும் மனிதர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும் என்றும் பரிந்துரைக்கிறார்.

பயணத்தை (மனதுக்குள் நிகழும் உள்முகப் பயணம் உட்பட) முன்வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பெரும்பாலானவை மெல்லுணர்வையும் நேர்மறைச் சிந்தனைகளையும் விதைக்கும் ஃபீல் குட் படங்களாகவே அமைந்துள்ளன. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் இரண்டே கால் மணி நேரத்துக்கு நீட்டிப்பதற்குப் போதுமான அழுத்தம் கதையில் இல்லாதது பல இடங்களில் திரைக்கதையின் தொய்வாக வெளிப்படுகிறது.

ஆனால் கதைக்குள் இரண்டு கதைகள், கதையைப் படிப்பவரே தன்னை ஒரு கதாபாத்திரமாக கற்பனை செய்துகொள்வது என்பது போன்ற சுவாரசியமான விஷயங்களைச் சேர்த்திருப்பது அழுத்தமான, புதுமையான பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, உயர்தரமான மேக்கிங் ஆகியவற்றால் ஒரு தரமான் ஃபீல் குட் திரைப்படத்தைப் பார்த்த நிறைவுடனும் உதடுகளில் புன்னகையுடனும் திரையரங்கைவிட்டு வெளியே வர முடிகிறது.

படத்தின் கதைமாந்தர்களும் கதைச் சூழலும் உயர் நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமே உரியவை. இதனால் பல  காட்சிகளில் ஒரு அந்நியத் தன்மையை உணர முடிகிறது. கதைக்குள் கதைகளாக வரும் இரண்டு கதைகளில் முதலில் வரும் வீரா - மீனாட்சி கதையில் புதுமையாக எதுவும் இல்லை. நாயகி கூடைப்பந்து வீராங்கனையாக இருப்பது மட்டுமே இதில் சற்று புதிய அம்சம். அதே நேரம் மீனாட்சி - பிரபா கதை அழகாகவும் ரசனை மிக்கதாகவும் அமைந்துள்ளது.

துறுதுறுப்பும் சுயசார்பும் மிக்க மதியாக அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு.  அவருக்கும் அவருடைய தந்தை சென்னியப்பனாக வரும் அழகம்பெருமாளுக்கும் இடையிலான அன்பும் ஏட்டிக்குப் போட்டியுணர்வும் இந்தக் கதையப் பெரிதும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இந்தக் கதையில் நிகழும் ட்விஸ்ட்டும் புன்னகை பூக்கச் செய்கிறது.  மதி-பிரபாவை தேடிச் செல்லும் பயணம் இமாசல பிரதேசத்தின் பனிப்பொழிவு பகுதிகளால் கண்களுக்கும் விருந்தாகின்றன.  சுபத்ராவின் பாத்திரப் படைப்பும் சுயசார்புடன் வாழ விரும்பும் நவீன பெண்களுக்கான நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது.

அசோக் செல்வனை மூன்று கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. அவற்றில் பிரபாவாக அவருடைய நடிப்பைப் பெரிதும் ரசிக்க முடிகிறது. மற்ற இரண்டிலும் குறைசொல்லவோ பாராட்டவோ எதுவும் இல்லை. ரிது வர்மா கதாபாத்திரத்தின் தன்மையை கச்சிதமாக உள்வாங்கி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அபர்ணா பாலமுரளியின் நடிப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம். சிவாத்மிகாவும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். சிவதா, ஜீவா இருவரும் கெளரவத் தொற்றத்தில் வந்து படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையில் பாடல்களும் தரண் குமாரின் பின்னணி இசையும் படத்தின் ஃபீல்குட் தன்மைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு ஆண்டனியின் படத்தொகுப்பு, கலை இயக்கம் என தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை மேம்படுத்த உதவியுள்ளன.

மொத்தத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் அனுபத்துக்காக குறைகளை மன்னிக்க வைத்துவிடுகிறது  ‘நித்தம் ஒரு வானம்’.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in