இந்த வருடத்தின் இன்னுமொரு ‘ஃபீல் குட் மூவி’!

இந்த வருடத்தின் இன்னுமொரு ‘ஃபீல் குட் மூவி’!

திருச்சிற்றம்பலம், சுந்தரி கார்டன்ஸ் என இந்த வருடத்தில் வெளியான ’ஃபீல் குட்’ திரைப்படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பை அடுத்து, மற்றுமொரு ஃபீல் குட் படைப்பாக ‘நித்தம் ஒரு வானம்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகிறது.

நாயகன் அசோக் செல்வனுக்கு ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜ்சேகர் என 3 நாயகியர். மணமுடிக்கப் போகும் பெண்ணின் மனதறிந்து அவளது காதலனுடன் அனுப்பி வைக்கும் அசோக் செல்வனின் வாழ்க்கையில் மேலும் சில காதல்கள் குறுக்கிடுகின்றன. அவை அவரது சொந்த அனுபவமாக அல்லாது பிறரது காதல் கதைகளாக சில டைரிகளின் வடிவில் கிடைக்கின்றன. அந்த கதைகளின் நாயகர்களும் அசோக் செல்வன்களாகவே பார்வையாளர்களுக்கு விரிகிறார்கள். அவற்றிலும் சுவாரசியமான காதல் கதைகள் பயணிக்கின்றன.

துரதிருஷ்டவசமாய் அந்த டைரிகளின் கடைசி பக்கங்கள் காணாது போயிருக்க, நிஜ காதல் கதைகளின் கடைசி அத்தியாயத்தை தேடி வெவ்வேறு ஊர்களுக்கு அசோக் செல்வன் பயணிக்கிறார். இதன் பொருட்டு சென்னை மட்டுமன்றி சண்டிகர், மணாலி, கோவை, கொல்கத்தா என்றெல்லாம் கதையும் நடைபோடுகிறது. இந்த வருடத்தில் ஃபீல் குட் திரைப்படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை நம்பி, நித்தம் ஒரு வானம் படக்குழு நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

படத்தின் நாயகியரில் ஒருவரான அபர்ணா பாலமுரளி நித்தம் ஒரு வானம் படத்துக்காக தனது முதல் பின்னணி பாடலை பாடியுள்ளார். ’தட புட காத்து’ என்ற அந்த பாடல் நேற்று வெளியானது. கோபி சுந்தர் இசையமைக்க, திரைப்படத்தை புதுமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in