நாட்டையே உலுக்கிய தியேட்டர் தீ விபத்து வழக்கு: வெப்சீரிஸ் வடிவில் வருகிறது

நாட்டையே உலுக்கிய தியேட்டர் தீ விபத்து வழக்கு: வெப்சீரிஸ் வடிவில் வருகிறது

இந்தியாவை உலுக்கிய டெல்லி உப்ஹார் தியேட்டர் தீ விபத்து தொடர்பான வழக்கு, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெப் சீரிஸ் வடிவில் வெளியாகிறது.

1997, ஜூன் 13. தெற்கு தில்லியின் உப்ஹார் திரையரங்கில் ’பார்டர்’ திரைப்படம் பார்க்க குவிந்த மக்கள், நாடு அதற்கு முன் சந்தித்திராத திரையரங்க தீ விபத்துக்கு ஆளானார்கள். மூச்சுத் திணறியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 59 அப்பாவிகள் இறந்ததோடு 103 பேர் படுகாயம் அடைந்து எதிர்காலம் தொலைத்தனர். தீ விளைந்தது விபத்து என்ற போதும், மனித அலட்சியம் மற்றும் தவறுகளால் உயிர் பலிகள் அதிகமானது பின்னர் தெரிய வந்தது.

உற்றார் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் மத்தியில் தங்கள் 2 குழந்தைகளையும் இழந்த சேகர் கிருஷ்ணமூர்த்தி - நீலம் தம்பதி, பெரும் சட்டப் போராட்டத்தை கையில் எடுத்தனர். டெல்லி போலீஸ் முதல் சிபிஐ வரை விசாரணை மேற்கொண்ட போதும், பணபலம் படைத்த குற்றவாளிகள் 25 ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடித்தனர். ஒருவழியாக 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு சாத்தியமானது. அதற்கு முன்னதாக நீதி செத்திருந்த போதும், சேகர் கிருஷ்ணமூர்த்தி - நீலம் போன்ற பலரின் ரணங்களை ஆற்றியது.

வலைத்தொடரில் அபய் - ராஜ்ஸ்ரீ
வலைத்தொடரில் அபய் - ராஜ்ஸ்ரீ

இந்த வழக்கின் பின்னணியில், திரையரங்கின் உரிமையாளர்கள் மேற்கொண்ட தகிடுதத்தங்கள், சட்டத்தின் சகல ஓட்டைகளையும் பயன்படுத்தி அவர்கள் தப்பித்தது, குற்றம்சாட்டபட்ட 16 பேருக்கு எதிராக குழந்தையை இழந்த தம்பதி நம்பிக்கையுடன் தொடர்ந்த சட்டப் போராட்டம் ஆகியவற்றை ’ட்ரையல் பை ஃபயர்’ என்ற வலைத்தொடராக பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய திரையரங்குகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவும் உப்ஹார் விபத்தின் பாடத்திலிருந்தே உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சேகர் கிருஷ்ணமூர்த்தி - நீலம் தம்பதியாக, அபய் தியோல் - ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே நடித்துள்ளனர். உடன் அனுபம்கெர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 13 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இந்த வலைத்தொடருக்கான ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்தி வலைத்தொடரான உப்ஹார், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளிலும் காணக்கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in