
மனிதர்களின் உயிர் காக்கும் பல கோடி செலவிலான மருந்துகளை கண்டுபிடிப்பதே உண்மையான வல்லரசு தேசத்தின் அடையாளம் என்ற கருத்தாக்கத்துடன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலான புதிய திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், திருநங்கைகளின் காதலை சொல்லும் 'தாதா 87', பெண்களின் பாதுகாப்பை வித்தியாசமான கோணத்தில் பேசும் 'பவுடர்' ஆகியவை இதுவரை வெளியாகி இருக்கின்றன. இந்த வரிசையில் பள்ளிப் பருவம் முதலே மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு ’ஹரா‘ என்ற திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இதில் வெள்ளி விழா நாயகனான மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதனையடுத்து தசை சிதைவு நோய் குறித்தும், பலகோடி செலவு வைக்கும் அதற்கான மருந்தினை இந்தியாவிலேயே குறைந்த விலையில் தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தையும் முன்னிறுத்தி, புதிய படம் ஒன்றை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு, தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் ரூ.11 கோடி நன்கொடை அளித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவற்றின் பின்னணியில் தசை சிதைவு நோய்க்கான ஊசியின் விலை ரூ17.5 கோடி என்பதும், அவற்றை வெளிநாட்டிலிருந்தே தருவிக்க முடியும் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தின.
இந்த தசை சிதைவு நோய் பற்றியும், அதன் சிகிச்சைக்கு ஏன் இத்தனை செலவாகிறது என்பதை மையமாக்கியும் புதிய திரைப்படம் கேள்வி எழுப்ப உள்ளது. படப்பிடிப்பில் உள்ள தலைப்பு இடப்படாத இந்த புதிய திரைப்படம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் படும் சிரமங்களையும் பேசுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர், மகளாக பேபி வேதாஷ்யா, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
"நிலாவுக்கும் இதர கிரகங்களுக்கும் பயணிப்பது எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு, தசை சிதைவு நோய் போன்றவைக்கு குறைந்த செலவில் உள்நாட்டிலியே மருந்துகள் தயாரிப்பதும் அவசியம். இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கு இவையும் முக்கியம் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு" என்று கூறியிருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.