பரவி வரும் புதிய கரோனா வைரஸ்: திட்டமிட்டப்படி `வாரிசு' இசை வெளியீட்டு விழா நடக்குமா?

பரவி வரும் புதிய கரோனா வைரஸ்: திட்டமிட்டப்படி `வாரிசு' இசை வெளியீட்டு விழா நடக்குமா?

புதிய கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்யை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வருகிறார்கள். விஜய்யை காண ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

காரணம், கரோனா வைரஸின் புதுவகை சீனாவில் வேகமாக பரவி வருவதுதான். இந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், `வாரிசு' இசை வெளியீட்டு விழா திட்டமிட்டப்படி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in