பாஸ்வேர்டு ஷேர் செய்வோருக்கு ‘செக்’ வைக்கும் நெட்ஃபிளிக்ஸ்!

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்

பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் சந்தாதாரர்களுக்கு ’செக்’ வைக்க முடிவு செய்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். இதன் மூலம் சரிவிலிருக்கும் வருமான வாய்ப்பை நிமிர்த்தவும் முடிவு செய்திருக்கிறது.

நட்புக்கான அடையாளங்களில் ஒன்று ஷேரிங்! ஆனால் அது நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டாக இருக்க இனிமேல் வாய்ப்பில்லை. பாஸ்வேர்ட் ஷேரிங் காரணமாக வருமானத்தை பெருமளவு இழந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மேற்படி ஷேரிங் அன்பர்களுக்கு கடிவாளமிட முடிவு செய்துள்ளது.

உலகளாவிய ஓடிடி தளங்களில் நெட்ஃபிளிக்ஸ் முதன்மையானதும், முன்னணியில் இருப்பதுமாக பெருமை கொண்டிருந்தது. கரோனா காலத்தில் வீடடைந்த மக்கள் ஓடிடி தளங்களில் ஐக்கியமானதில் புற்றீசலாய் புதிய ஓடிடி தளங்கள் போட்டியில் குதித்தன. இதனால் சந்தையில் கடும் சவாலை நெட்ஃபிளிக்ஸ் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

போட்டியில் தரமே பிரதானம் என நம்பிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கோடிகளை இறைந்து படைப்புகளை பட்டியலிட்டுப் பார்த்தது. ஆனபோதும் சந்தாதாரர் சரிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. இவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நெட்ஃபிளிஸ், ஆய்வறிக்கையின் முடிவை பார்த்ததும் அதிர்ந்து போனது. சுமார் 10 கோடிக்கும் மேலானார் கட்டணமின்றியே நெட்ஃபிளிக்ஸ் படைப்புகளை கண்டுகளித்து வந்திருக்கின்றனர்.

நண்பர்கள் என்ற பெயரில் இரவல் பெறப்படும் பாஸ்வேர்ட் காரணமாக பெருமளவு வருமானம் இழப்பாவதை உணர்ந்த நெட்ஃபிளிக்ஸ் அதற்கு முடிவு கட்ட வருகிறது. இதன்படி, நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் தங்கள் அடையாளத்தை மாதம் ஒரு முறையேனும் நிரூபித்தாக வேண்டியது கட்டாயமாகிறது. பயனரின் கட்டண திட்டம் அடிப்படையில் எத்தனை திரைகளில் நெட்ஃபிளிக்ஸ் ரசிக்கப்படுகிறது என்று தொடர்ந்து கண்காணிக்கும் நெட்ஃபிளிக்ஸ் மென்பொருள்கள், சந்தேக கணக்குகளை உடனடியாக எச்சரிக்கும்.

நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட்
நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட்

இதனை அடுத்து நெட்ஃபிளிக்ஸ் இணைப்பு பெற்றவருக்கு ஓடிபி செல்லும். சந்தேக இணைப்பாளர்கள் இந்த ஓடிபியை அடுத்த 15 நிமிடங்களில் உள்ளிடாவிடில், அன்னாருக்கான நெட்ஃபிளிக்ஸ் துண்டிக்கப்படும். அல்லது சொந்தமாய் நெட்ஃபிளிக்ஸ் கணக்கு தொடங்குமாறு அறிவுறுத்தப்படும். மேலும், மாதம் ஒருமுறை வீட்டின் இணைய இணைப்பில் இருந்தவாறு, நெட்ஃபிளிக்ஸ் சந்தாரார்கள் ஒரு முறையேனும் லாகின் செய்தாக வேண்டும்.

ஒருவேளை தொடர் பயணத்தில் இருப்பின் அதனை காரணமாக்கி 7 நாட்களுக்கு அவகாசம் பெறலாம். இந்த புதிய அஸ்திரங்கள் வாயிலாக முறையற்ற பாஸ்வேர்ட் பகிர்வுகள் முடிவுக்கு வரும் என நெட்ஃபிளிக்ஸ் நம்புகிறது. நெட்ஃபிளிக்ஸ் நடைமுறைப்படுத்தும் புதிய பாஸ்வேர்ட் கெடுபிடிகள், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

வருமானத்தை மீட்க இது தவிர்த்து வேறு பல உபாயங்களையும் நெட்ஃபிளிக்ஸ் பரிசீலித்து வருகிறது. இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் கட்டண விகிதத்தை வெகுவாய் குறைத்திருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானபோது ரூ500 வசூலித்த நெட்ஃபிளிக்ஸ் தற்போது அதற்கு கீழே, ரூ199 மற்றும் ரூ149 என 2 சகாய கட்டண விகிதங்களை அமல்படுத்தியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் குறைந்த கட்டணத்தில் விளம்பரங்களுடன் நெட்ஃபிளிக்ஸ் படைப்புகளை அணுகும் அனுபவத்தை பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுவும் இந்தியாவுக்கு வரலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in