நெட்ஃபிளிக்ஸின் விளம்பர திட்டத்துக்கு 4 கோடியாக எகிறிய வரவேற்பு... இந்தியாவிலும் அறிமுகப்படுத்த பரிசீலனை

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தனது விளம்பர ஆதரவு திட்டங்களுக்கு அதிகரித்திருக்கும் வரவேற்பை அடுத்து, அதனை இந்தியா உட்பட மேலும் பல நாடுகளுக்கு பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் நெட்ஃபிளிக்ஸின் இந்த உத்தியை, போட்டி ஓடிடி தளங்களும் உற்று கவனித்து வருகின்றன.

சர்வதேச அளவில் முன்னோடி ஓடிடி தளமாக நெட்ஃபிளிக்ஸ் விளக்குகிறது. களத்திலுள்ள போட்டி ஓடிடி தளங்கள் முதல் புற்றீசலாய் முளைத்து வரும் புதிய ஓடிடி தளங்கள் வரை நெட்ஃபிளிஸ் நிறுவனமே முன்னோடியாக விளங்குகிறது. உள்ளடக்கம் முதல் வியாபார வியூகங்கள் வரை நெட்ஃபிளிக்ஸின் பாணியை இதர ஓடிடி தளங்கள் பின்பற்றவும் செய்து வருகின்றன. இந்த வகையில் நெட்ஃபிளிஸ் அண்மைக்காலமாக முன்னெடுத்திருக்கும் விளம்பர ஆதரவு சந்தாதாரர் திட்டம் கவனம் பெற்றுள்ளது.

ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்கள்

ஓடிடி தளங்களுக்கான பொற்காலமாக கொரோனா காலம் விளங்கியது. பொதுமுடக்கம் காரணமாக வீடடைந்து கிடந்த மக்களுக்கு ஓடிடி தளங்கள் ஆசுவாசமளித்தன. தொலைக்காட்சிகளின் திரைப்படங்கள், மெகாத்தொடர்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், ஓடிடியில் கிடைத்த காத்திரமான தொடர்கள் மற்றும் இதர படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. படைப்புகளை ருசிப்பதற்கான பூகோள எல்லைகளையும் இந்த ஓடிடி தளங்கள் அழித்ததில், ரசிகர்களின் உலகளாவிய ரசனையும் புதிய ருசி கண்டது. திரையரங்குகள் மூடப்பட்டதில் திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாக, ஓடிடி தளங்களுக்கான சந்தாதாரர்கள் மேலும் அதிகரித்தனர்

ஆனால் கொரோனா காலத்தின் நிறைவாக, உலகம் இயல்புக்கு திரும்பியதில் ஓடிடி பார்வையாளர்களும் எண்ணிக்கையில் சுருங்கினார்கள். இவை ஓடிடி தளங்களை சரிவில் தள்ளின. நெட்ஃப்ளிக்ஸ் தளமும் அடிவாங்கியது. இழப்பைத் தவிர்க்க, பாஸ்வேர்டு பகிர்வு முறைக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. கட்டணத் திட்டங்களில் பெரும் மாற்றங்களை செய்தது. அவற்றில் புதிய உத்தியாக, விளம்பர அடிப்படையிலான கட்டணத் திட்டத்தை கொண்டு வந்தது. இவை ஓடிடி தளங்கள் மத்தியில் வெவ்வேறு வடிவங்களில் ஏற்கனவே இருப்பவைதான் என்றபோதும், நெட்ஃபிளிக்ஸின் விளம்பர ஆதரவு கட்டணத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு எழுந்தது.

ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்கள்

இந்த கட்டணத் திட்டத்தில், படைப்புகளின் தொடக்கம் மற்றும் நிறைவாக சிறு விளம்பரங்கள் தோன்றும். ஆனபோதும் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எகிறியது. கடந்தாண்டு சுமார் 50 லட்சமாக இருந்த, இந்த விளம்பர ஆதரவு கட்டணத் திட்டத்துக்கு தற்போது 4 கோடியாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில், சுமார் 40 சதவீத சந்தாதாரர்கள் விளம்பர ஆதரவு கட்டணத் திட்டங்களின் கீழ் நெட்ஃபிளிக்ஸ் படைப்புகளை ரசித்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்தியா போன்ற, இத்திட்டம் இன்னமும் அமலுக்கு வராத நாடுகளிலும் அவற்றை செயல்படுத்த நெட்ஃபிளிக்ஸ் பரிசீலித்து வருகிறது. அபரிமிதமான சந்தை நிறைந்த இந்தியாவின் வருவாயை தவறவிட நெட்ஃபிளிக்ஸ் தயாராக இல்லை. நெட்ஃபிளிக்ஸின் இந்த நகர்வை இதர போட்டி ஓடிடி தளங்களும் உற்று கவனித்து வருகின்றன. அவை அநேகமாக நெட்ஃபிளிக்ஸ் பாணியில் விரைவில் களமிறங்கக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in