
அருண்ராஜா காமராஜுடன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜக்ட்ஸுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்த படம், ’நெஞ்சுக்கு நீதி’. இந்தியில் வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் இது. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் 50 நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
தயாரிப்பாளர் போனிகபூர், உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க சங்கிலி அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் பரிசளித்தார். தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவருடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பிறகு சரியாகிவிட்டது. இயக்குநர் அருண்ராஜா இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நல்ல படத்திற்கு வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நல்ல படத்திற்கு மக்கள் எப்போதும் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.