திரை விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி

திரை விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி

சட்டத்தை சரியாகப் பயன்படுத்தி நியாயத்தை நிலைநிறுத்தும் ஒரு காவல் துறை அதிகாரியின் கதைதான் ’நெஞ்சுக்கு நீதி’.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் பல வகையான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் இந்தக் கொடுமைகளின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பதவியேற்கிறார் விஜய் எனும் விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்). அவர் பொறுப்பேற்ற சில நாட்களில் அந்த ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள காலனிப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிகள் இருவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்படுகின்றனர்.

அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு சிறுமியான சத்யா தொலைந்துபோயிருக்கிறாள். இரண்டு சிறுமியருக்கும் தன்பாலின உறவு இருந்ததால் அவர்களின் தந்தையரே அந்தச் சிறுமியரை ஆணவக் கொலை செய்துவிட்டதாக வழக்கை திசைதிருப்பி விரைந்து முடிக்கும் முயற்சிகளில் காவல்துறையில் விஜய்க்கு கீழுள்ளவர்களும் உயரதிகாரிகளும் முயல்கின்றனர். சிறுமியரின் தந்தையர் இருவரும் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனால், இறந்துவிட்ட பெண்கள் உள்ளூர் எம்எல்ஏ-வின் உறவினர் குணசேகரனின் ஆலையில் பணியாற்றியவர்கள் என்றும் 30 ரூபாய் அதிகக் கூலி கேட்டதற்காக குணசேகரன்தான் அவர்களை கொன்றிருக்கிறார் என்று சத்யாவின் அக்காவான குறிஞ்சி (ஷிவானி ராஜசேகர்) மூலமாக விஜய் தெரிந்துகொள்கிறார். பிறப்பின் அடிப்படையிலான ஏற்றதாழ்வு மிக்க சமூகக் கட்டமைப்பு, அரசியல்வாதிகளின் அதிகார பலம், காவல்துறை அதிகாரிகளிடையே புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க மனநிலை ஆகியவற்றால் விளையும் தடைகளைக் கடந்து விஜய் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தாரா, இரண்டு பெண்களின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தாரா என்பதே மீதிக் கதை.

2019-ல் வெளியாகி பரவலாக பாராட்டப்பட்ட ‘ஆர்ட்டிகிள் 15’ இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்கம்தான் ‘நெஞ்சுக்கு நீதி’. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தைந் நிலைநாட்டுவதற்கும் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தருவதற்கும் அரசியல்சார்பும் கருத்தியல் பிடிப்பும் ஆழமான சமூகப் புரிதலும் இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டு நடந்துகொண்டாலே போதுமானது என்பதையும் சரியான கைகளில் இருந்தால் சட்டம் அனைவருக்குமான நியாயத்தைப் பெற்றுத் தரும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்ததே ’ஆர்ட்டிகிள் 15’ திரைப்படத்தின் சிறப்பு. அனுபவ் சின்ஹா இந்தியில் எழுதி இயக்கிய கதையை எடுத்துக்கொண்டு தமிழில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். ’கனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த அருண்ராஜா காமராஜ் தன்னுடைய இரண்டாம் படத்தில் அதைவிட கனமான உள்ளடக்கமும் சமூக முக்கியத்துவமும் வாய்ந்த திரைக்கதையின் மூலம் சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார்.

அசல் படத்தின் கதையின் ஆன்மாவைச் சிதைக்காமல் அப்படியே கடத்தியிருக்கிறார் இயக்குநர். அதே நேரம் திரைக்கதையில் அவர் செய்திருக்கும் மாற்றங்கள் ஒட்டுமொத்தப் படத்தை தமிழ்ச் சூழலுக்கு இன்னும் பொருத்தமானதாக மாற்றியிருப்பதோடு படத்தின் பேசுபொருளுக்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது. இதன் மூலம் இந்தப் படம் மறு ஆக்கம் என்றாலும் ‘இது ஒரு அருண்ராஜா காமராஜ்’ படைப்பு என்று படத்தின் டைட்டில் கார்டில் போடப்படுவதை மனதார ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அரசுப் பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சமைத்த உணவை தமது குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று ஆதிக்க சாதி் பெற்றோர் போராட்டம் நிகழ்த்தியதை நினைவுபடுத்தும் தொடக்கக் காட்சி, சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் காட்சிகளிலும் வசனங்களிலும் அம்பேத்கரோடு பெரியாரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருப்பது, சிபிஐ அதிகாரியிடமிருந்து வெளிப்படும் இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு, நியாயத்தின் பக்கம் உறுதியுடன் நிற்கும் பயிற்சி மருத்துவர் கதாபாத்திரத்துக்கு நீட் தேர்வை எதிர்த்து உயிர்துறந்த அனிதாவின் பெயரை வைத்தது என தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருக்கமான பல விஷயங்கள் கதையின் சாரம் கெடாமல் அழகாகவும் அழுத்தமாகவும் இணைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் குழுவின் தலைவராக வரும் இளைஞன் கதாபாத்திரத்துக்கான காட்சிகளும் முக்கியத்துவம் மூலப் படைப்பைவிட அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

கதையின் சில முக்கியமான நகர்வுகளில் இந்திப் படத்தில் சொல்லாமல் விடப்பட்ட அல்லது குறைவாக சொல்லப்பட்ட தகவல்களை விரிவாகச் சொல்லும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கதையை கூடுதல் எளிமையாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள முடிகிறது. இவை எல்லாம் சேர்ந்து சமூக ஏற்றதாழ்வுக்கும் ஆதிக்க மனநிலையினால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் எதிரான ஆழமான அழுத்தமான மன எழுச்சியை உருவாக்கும் இலக்கில் இந்தப் படம் பேரளவில் வெற்றிபெற்றிருக்கிறது. தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் இந்த இலக்கை அடைவதில் இயக்குநருக்கு கைகொடுத்துள்ளன.

ஒரு குற்றவியல் த்ரில்லர் படமாக முதல் பாதி சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்துக்குப் பிறகு சூடுபிடித்து இறுதிவரை பரபரப்புக் குறையாமல் திரைக்கதை நகர்கிறது. ஆனாலும் தமிழ்ப் படத்தின் நீளம் மூலப் படத்தைக் காட்டிலும் 15 -20 நிமிடங்கள் அதிகம் என்பது சில இடங்களில் உரைக்கத்தான் செய்கிறது. மேலும், சத்யா எப்படி தொலைந்து போனாள், அதன் பிறகு அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்த குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் இன்னும் சில காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். பிணக் கூராய்வு டி.என்.ஏ பரிசோதனை, ஆகிய மருத்துவ விஷயங்கள் சார்ந்த காட்சிகளும் வசனங்களும் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. படத்தின் நாயகன் முதல்வரின் மகன் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதாலும் சில இடங்களில் முந்தைய ஆட்சியாளர்களை மோசமாகச் சித்தரிக்கும் வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையைப் பேசும் படத்தில் இதுபோன்ற திணிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் தனக்கான நாயக பிம்பத்தை பெரிதாக்கிக் காட்டுவதற்கான ‘மாஸ்’ காட்சிகள் எதையும் திணிக்கச் சொல்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு தன்னை அர்ப்பணித்து கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் இளம் போராளியாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் குமரனாக வரும் ஆதி. சாதி ஆதிக்க மனநிலை கொண்ட காவல் ஆய்வாளராக சுரேஷ் சக்ரவர்த்தி துறைக்குள்ளேயே ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காவலரான இளவரசு, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக சட்டத்தின் முன் நியாயம் வேண்டி நிற்கும் ஷிவானி ராஜசேகர் என துணைக் கதாபாத்திரங்களில் நடித்த பலர் நல்ல வகையில் பங்களித்திருக்கிறார்கள். திபு நினன் தாமஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் தாக்கத்தை மேம்படுத்துகின்றன. தினேஷ் கிருஷ்ணனின் பல நீண்ட சிங்கிள் ஷாட் காட்சிகளும் அரிதான கேமரா கோணங்களும் நிறைந்த ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம்

மொத்தத்தில் மனசாட்சியின் குரல் கேட்டு நியாயத்தின் வழி நின்று சட்டத்தின் மூலமாக அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும் சமூக சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்னும் நம்பிக்கையை ஆழமாக விதைத்திருப்பதன் மூலம் சமகாலத்துக்கு மிகவும் தேவையான முக்கியமான திரைப்படமாகியிருக்கிறது ‘நெஞ்சுக்கு நீதி’.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in