`நெஞ்சுக்கு நீதி’ இன்றைக்குத் தேவையான படம்: உதயநிதி ஸ்டாலின்

`நெஞ்சுக்கு நீதி’ இன்றைக்குத் தேவையான படம்: உதயநிதி ஸ்டாலின்

'நெஞ்சுக்கு நீதி' இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான படம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இந்தியில் வெளியான ’ஆர்டிகிள் 15’ படம், தமிழில் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழரசன் வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ’இந்தப் படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம்’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ``முதல் நன்றி, தாத்தா கலைஞருக்கு . அவர் தந்ததுதான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். ’நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, ’பார்த்து பண்ணுங்க’ எனக் கூறினார். படம் எடுக்கும் போது, கரோனா பெரிய தடையாக இருந்தது. இயக்குநர் அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்தப் படத்தின் வெற்றி சமர்ப்பணம். இதில் நடிக்க ஒப்புக்கொண்ட போது , எப்படி போலீஸாக நடிக்க போகிறேன்? என்ற பயம் இருந்தது. இந்தப் படம் சமூகநீதி பேசும் படம், இந்த நேரத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்'' என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மகிழ்திருமேனி, நடிகைகள் தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் உட்பட பலர் பேசினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in