‘பீஸ்ட்’ படத்தை முதலில் பார்த்தது யார்?

நெல்சன் சொன்ன ரகசியம்
‘பீஸ்ட்’ படத்தை முதலில் பார்த்தது யார்?

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ல் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை முதலில் பார்த்தது யார் எனும் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

நெல்சன் தனது முதல் படமான ‘கோலமாவு கோகிலா’ முதல், ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் ‘தலைவர் 169’ வரை தனது எல்லா படங்களுக்கும் அனிருத்தையே இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வருகிறார். அனிருத்துக்கும் தனக்கும் உள்ள நட்பு குறித்து, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார்.

“நான் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ சிறிய படம்தான். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அனிருத் அதற்கு சிறந்த இசையைக் கொடுத்தார். படத்தின் கதை சூப்பராக இருந்தால் தன்னுடைய இசை அதைவிட சூப்பராக இருக்க வேண்டும் என எப்போதும் அவர் நினைப்பார். என்னுடைய எந்த படம் எடுத்தாலும் முதலில் அனிருத்திடமும் அவருடைய டீமில் இருக்கும் சிலரிடமும்தான் காட்டுவேன். ‘பீஸ்ட்’ படமும் முதலில் அவரிடம் காட்டிதான் விமர்சனம் வாங்கினேன்” என்று அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் நெல்சன்.

அதேபோல, தொடர்ந்து தன் படங்களுக்கு சிவகார்த்திகேயனைப் பாடல் எழுத வைத்து ஹிட்டும் கொடுத்திருக்கிறார். ‘கோலமாவு கோகிலா’வில் ‘கல்யாண வயசு’ பாடல், ‘டாக்டர்’ படத்தில் ‘செல்லம்மா’, இப்போது ‘பீஸ்ட்’ படத்தில் ‘அரபிக்குத்து’ என அனைத்துமே சிவகார்த்திகேயன் எழுதி வரவேற்பைப் பெற்றவை.

“அனிருத்தும் நானும் எங்களுக்கு சவுகரியமான பாடலாசிரியர் என யோசித்தால் சிவாதான் முதலில் நினைவுக்கு வருவார். பாடலை எழுதுவதில் இருந்து பதிவு செய்வது வரை மெருகேற்றிக்கொண்டே ரொம்ப சின்சியராக ஃபாலோ செய்வார் சிவா. அதனால் எங்கள் நட்பு கூட்டணி எப்போதும் தொடரும்” என்று சொல்லி இருக்கிறார் நெல்சன்.

அப்போ, ‘தலைவர் 169’ படத்திலும் சிவகார்த்திகேயன் பாட்டு கன்ஃபர்ம்!

Related Stories

No stories found.