
நட்சத்திர ஓட்டலில், பிரபல பாடகியின் கணவருடைய வைர மோதிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகி நேகா கக்கர். இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். இவரது கணவர் ரோஹன்ப்ரீத் சிங். பஞ்சாபி பாடகரான ரோஹன் சமீபத்தில் இமாசல பிரதேசத்தில் மண்டி நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இரவில் தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரம், ஐபோன், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களையும் பணத்தையும் மேஜை மீது வைத்துவிட்டு உறங்கினார்.
காலையில் எழுந்து பார்த்தபோது தனது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது கண்டு ரோஹன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்த அவர், பின்னர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் யாரும் சிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.