23 ஆண்டுகளுக்கு பிறகு `படையப்பா’வுடன் இணையும் `நீலாம்பரி’!

23 ஆண்டுகளுக்கு பிறகு `படையப்பா’வுடன் இணையும் `நீலாம்பரி’!

நடிகை ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. இதில் நடிகர் ரஜினிகாந்த், செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமர்ஷியலாக படம் மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன் 'நீலாம்பரி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லியாக இவர் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாதது. அந்த அளவிற்கு நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஆணவம், கோபம், செருக்கு என பணக்கார வீட்டு பெண்ணாக கதாநாயகனுக்கு சவால் விட்டு அவனை அடைய துடிக்கும் அந்த பாத்திரத்தில் அப்படியே பொருந்தி போயிருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

இன்றளவும் அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கவே செய்கிறது. படத்தில் ரஜினிகாந்த்- ரம்யா கிருஷ்ணன் திரையில் வரும் காட்சிகளும் மறக்க முடியாதது. அந்த அளவிற்கு இந்த இணை ரசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து ரம்யா கிருஷ்ணன் மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ‘பீஸ்ட்’ படத்திற்கு பின்பு இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த்துடன் இணைந்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது. மேலும், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இதில் நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தில் தான் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார். இந்த செய்தியை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார் ரம்யா.

‘படையப்பா’ படத்தில் ரஜினியை பார்த்து, ‘வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறல’ என்பது போன்று அவர் பேசும் பல வசனங்கள் இன்றும் இணையத்தில் ஹிட். அந்த வகையில் இந்த படத்தில் அவர் ரஜினியுடன் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், விரைவில் ரம்யா கிருஷ்ணனும் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in