நடிகை நஸ்ரியா தன் கணவரும் நடிகருமான பகத் பாசிலுடன் காதல் மலர்ந்த கதையை 'அடடே சுந்தரா' படத்திற்கான தனது பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
நானி - நஸ்ரியா நடிப்பில் இந்த மாதம் ஜூன் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியாகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சுந்தர் எனும் கதாபாத்திரத்தில் நானியும் லீலா கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான நேர்காணலின்போது, நஸ்ரியா பகத்துடன் காதல் மலர்ந்த கதையை பகிர்ந்திருக்கிறார். ''நானும் பகத்தும் முன்பிருந்தே நல்ல நண்பர்கள். ஆனால், எங்களுக்குள் காதல் மலர்ந்தது 'பெங்களூரு டேய்ஸ்' திரைப்பட சமயத்தின் போதுதான். கடந்த 2014-ல் வெளியான இந்த படத்தில்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து முதன் முறையாக பணியாற்றினோம்.
எங்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் இருந்தது. அவர்களும் மிக மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்தி வைத்தனர். நான்தான் முதலில் அவரிடம் காதலை சொன்னேன் என்று நினைக்கிறேன். அவரை வாழ்நாள் முழுவதும் நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று அவரிடம் நான் சொன்னது அவருக்கு பிடித்திருந்தது. இப்படி எந்த பெண்ணும் என்னிடம் இதற்கு முன்பு சொன்னது இல்லை என்று சொன்னார். அது போலவே நான் திருமணம் முடிந்ததும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அதற்கு பிறகு நான் மீண்டும் நடிக்க வேண்டும் என பகத் ஆசைப்பட்டார். தொடர்ந்து நான் கதைகள் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திருமணத்திற்கு பின்பு பகத்தும் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால், அதை பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் திருமணத்திற்கு பிறகு எதுவுமே மாறவில்லை. நான் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இருவரும் வேலை தொடர்பாகவும் நிறைய பகிர்ந்து கொள்வோம். ரசிகர்களை அவர் தன்னால் கட்டி போட்டதை போலவே என்னையும் அவர் தன் கண்களால் மயக்கி விட்டார்" என்கிறார் நஸ்ரியா.