நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு- பின்வாங்கியதா பிரபல ஓடிடி நிறுவனம்?


நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு- பின்வாங்கியதா பிரபல ஓடிடி நிறுவனம்?

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்புவதாக இருந்த பிரபல ஓடிடி நிறுவனம் தற்போது அதிலிருந்து பின்வாங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை, மகாபலிபுரத்தில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அட்லி, அனிருத் என பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பிரபலங்கள் பலரும் திருமணத்துக்கு வருகை தந்தனர். திருமண நாளில், தானும் நயன்தாராவும் மணக்கோலத்தில் இருந்தது, தாலி கட்டும் புகைப்படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இவர்களின் பிரத்யேக திருமண காணொலியை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாகவும் அதை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் ஒளிபரப்புவதாகவும் இதற்காக கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடியிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.

திருமண ஏற்பாடுகள், மணமேடை, திருமணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் அறை செலவுகள், திருமணத்தில் ஒருவருக்கான உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையுமே நெட்ஃப்ளிக்ஸ் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வந்தது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து மாதம் ஒன்று ஆகிவிட்டது. அதை மகிழ்ச்சியாக சொன்ன விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான், அட்லி என திருமணத்திற்கு வந்திருந்த பல பிரபலங்களின் புகைப்படங்களையும் முக்கியமான சில திருமண நிகழ்வின் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இதுவே நெட்ஃப்ளிக்ஸ் தனது ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில், ஒப்பந்தப்படி நெட்ஃப்ளிக்ஸ் எந்த ஒரு பிரபலங்களின் புகைப்படங்களையும் வெளியிடக்கூடாது என கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அதை விக்னேஷ் சிவன் மீறியதாகவும் அதனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 25 கோடி ரூபாயை திரும்பக்கேட்டு நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து திருமண வீடியோ ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றமானதாகவே அமைந்திருக்கிறது. இந்தச் செய்தி உண்மை தானா, ஒருவேளை உண்மை எனில் நெட்ஃப்ளிக்ஸ் தவிர்த்து வேறு எந்தத் தளத்தில் திருமண வீடியோவை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறித்து விக்னேஷ் சிவன் தெளிவுப்படுத்துவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in