நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு- நெட்ஃப்ளிக்ஸ் கொடுத்த விளக்கம்!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு- நெட்ஃப்ளிக்ஸ் கொடுத்த விளக்கம்!

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பில் இருந்து நெட்ஃப்ளிக்ஸ் பின்வாங்கியதாக வெளியான செய்திகளை அடுத்து தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, அனிருத் என திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

மேலும், இவர்களது திருமண வீடியோவை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் 25 கோடி ரூபாய் கொடுத்து பிரத்யேகமாக ஒளிபரப்ப இருப்பதாகவும் திருமண செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து நெட்ஃப்ளிக்ஸ் பின்வாங்கிவிட்டதாகவும், கொடுத்த 25 கோடி ரூபாயை திருப்பித்தர வேண்டும் என இந்த தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் ஷாருக்கான், ரஜினிகாந்த் என பல முக்கிய பிரபலங்களின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததும் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.

இப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெட்டிங் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘நயன்தாரா - விக்னேஷ் சிவன் நெட்ஃப்ளிக்ஸுக்கு வருவதை எண்ணி நாங்கள் சந்தோஷப்படுகிறோம். இது மற்ற கதைகளுக்கு அப்பாற்பட்டது’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in