நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்: திரையுலகினர் வாழ்த்து

நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்: திரையுலகினர் வாழ்த்து

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்தபடி, நயன்தாரா வெளியிட்டிருந்த புகைப்படம் அப்போது வைரலானது.

இந்நிலையில் இவர்களின் திருமணம், திருப்பதியில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்தை இருவரும் பார்த்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. எனினும், இவர்களின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், “எங்கள் திருமணம் திருப்பதியில் நடப்பதாக இருந்தது. பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், அங்கு நடத்துவது சிரமம் என்பது புரிந்தது. அதனால் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்” என்றார்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடந்தது. நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்தத் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் கார்த்தி உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நடைபெறும் இடத்தில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in