நயன்தாரா: தி பிசினஸ் உமன்

தொட்டுத் தொடரும் நம்பர் ஒன் ரகசியம்!
நயன்தாரா: தி பிசினஸ் உமன்
நயன்தாரா

துளியும் குறையாத நேர்மை, யாருக்கும் அஞ்சாத துணிச்சல், நம்பியவர்களுக்கு அளவில்லா அன்பு, வீழ்ந்தாலும் விடாமுயற்சி இவையெல்லாம் வெற்றியின் ரகசியம். சாதாரண வெற்றியல்ல, ஓவரின் 6 பந்துகளையும் பெவிலியனைத் தாண்டி சிக்ஸருக்கு விளாசிய இமாலய ஹிட். அதை நிகழ்த்திக் காட்டியவர் நயன்தாரா.

நடிகராவதுகூட எளிது, ஆனால், ரசிகர்கள் கொண்டாடும் ‘ஸ்டார்டம்’ எனும் இடத்தைத் தொடுவது அத்தனை சுலபமல்ல. அதற்கான பிராசஸ் மிகப்பெரியது. நேர்மையும், அதுதரும் துணிச்சலும் நயன்தாராவுக்கான மிகப்பெரிய வெளியைத் திறந்துவிட்டது. மாடலாகப் பயணத்தைத் தொடங்கி சினிமாவுக்குள் நடிகையாக உயர்ந்தவர், இப்போது ‘தி லிப் பாம் கம்பெனி’ மூலமாக தொழில் முனைவோராகி அனைவருக்கும் ரோல் மாடலாகவும் மாறியிருக்கிறார். நயன், தமிழ் சினிமாவின் ஐகானிக் ஹீரோயின். நடிப்பு, தயாரிப்பு, பிசினஸ் உமன் என தொடர் ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார்.

சினிமா பின்புலத்திலிருந்து வராத நடிகர்கள் எல்லோருமே வாய்ப்புகளை தவறவிடமாட்டார்கள். நயனும் அப்படித்தான். படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார். அதிலிருந்து முதல் பட வாய்ப்பு இயக்குநர் சத்யன் அந்திக்காடு மூலமாக வர, ‘மனசினக்கரெ’ எனும் மலையாளப் படத்தில் நாயகியாக திரையில் தோன்றினார். தமிழில் முதல் அறிமுகமான ‘ஐயா’ படத்திலேயே ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ஃபேவரைட் ஆனார். அடுத்து, ரஜினிக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான நாம், பின்னாளில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கப் போகிறோம் என்பது அப்போது, ‘சந்திரமுகி’ துர்க்காவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொட்டதெல்லாம் ஹிட்டென்றால், அது சீரான வெற்றிக்கான பாதையல்ல. நயனின் சினிமா கிராஃப் அப்படியான ஒன்றுதான். எதிர்ப்பார்ப்பைக் குறைத்துக் கொண்டவர்களை தோல்விகள் ஒருபோதும் பாதிக்காது. சந்திரமுகி பெரிய ஹிட். ஆனால், அடுத்தப் படமான கஜினியில் செகண்ட் ஹீரோயின். அதற்கடுத்தப் படமாக விஜய்யின் சிவகாசியில் ஐட்டம் பாடலில் நடனம். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடக்கூடாதென்பது நயனின் ஆல்டைம் பாலிஸி. அதனால் அனைத்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இப்படியான தருணத்தில், நயனின் திரையுலகப் பயணத்தை மாற்றியமைத்தது ‘ஈ’. நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபிக்க அவருக்கு கிடைத்த படமென்று சொல்லலாம். ஒரு பக்கம், கமர்ஷியல் ஹீரோயினாக வல்லவன், வில்லு, ஆதவனில் வந்தால் இன்னொரு பக்கம் கவர்ச்சியின் உச்சமாக பில்லா படத்தில் நடித்திருப்பார். இதற்கெல்லாம் அப்படியே நேரெதிராக ராமராஜ்ஜியத்தில் சீதையாக நடித்தார். இப்படி, எந்த ரோலில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும். அப்படியானவர்களில் நயனும் ஒருவர்.

நயன்தாரா நடிப்பில் 2 விஷயங்களை உணரலாம். மனதில் நிற்கும் கேரக்டர் ரோல், மற்றொன்று உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திறன். காசுக்காக எதையும் செய்யும் நாயகனைக் காதலிக்கும் பார் டான்ஸர் ஜோதியை ‘ஈ’ படத்திலும், குடும்பத்துக்காக காதலை மனதுக்குள் போட்டு குமுறும் கீர்த்தியை யாரடி நீ மோகினியிலும், காதல் தோல்வியால் உடைந்துவிழும் ரெஜினாவின் குணத்தை ராஜா ராணியிலும், வெற்றி தரும் போதமையை கலெக்டராக அறம் படத்திலும் என இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் மனதில் நிற்கும். கமர்ஷியலாக அஜித்துடன் ‘ஆரம்பம்’ முதல் ரஜினியுடன்’அண்ணாத்த’ வரை சில சமயங்களில் சிங்கிள்ஸ் வந்தாலும், அதிலும் பவுண்டரிகளை வீசுகிறார் நயன்.

அண்மையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நயன்தாரா, “இது டிஜிட்டல் யுகம். நீங்கள் ஏன் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இல்லை?’’ என்ற கேள்விக்கு, “ஒரு நடிகைக்கு, தான் நடிக்கும் படங்கள், அந்தப் படங்கள் மூலம் கொடுக்கும் மெசஜ், ஆஃப்ஸ்க்ரீன் வாழ்க்கை இவைதான் தனது ரசிகர்களுடன் நீடித்த தொடர்பை ஏற்படுத்தும். உங்கள் வெற்றி அல்லது உங்கள் அடையாளம், இன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததுதான் என்றால், அது உண்மையான வெற்றியாகாது. அது நீண்ட காலம் நிலைக்காது” என்றார் தெளிவாக. இதுதான் நயன்தாராவின் பாலிஸி.

தனிப்பட்ட வாழ்க்கை நயனுக்கு மிகப்பெரிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நயன்தாரா எமோஷனல் ரகம். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால், அவர்கள் மீது உயிராக இருப்பார். பிரபுதேவா மீதான அன்பினால் கையில் ‘பிரபு’ என டாட்டூ போட்டுக் கொண்டார். பிரபுதேவாவைச் சார்ந்தவர்களால் பல்வேறு மனகசப்புகளை சந்தித்தார். பிரச்சினை மீடியா வரை கொண்டுவரப்பட்டது. நயனுக்கு எதிராகச் சில இடங்களில் போராட்டம் கூட நடந்தது. ஒருகட்டத்தில் பிரபுதேவாவுடனான உறவை முறித்துக் கொண்டார்.

இந்த விஷயத்தை இங்கு குறிப்பிடக் காரணம் இருக்கிறது. ‘பிரேக் அப்’ கொடுத்த மன உளைச்சல், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் என முடங்கிய நயன், கொஞ்ச காலம் சினிமாவைவிட்டு முற்றிலும் விலகியிருந்தார். 11 மாதங்களுக்குப் பிறகு தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, மனவலிமையுடன் தயாரானார். மீண்டும் கோலிவுட்டில் ‘கம் பேக்’ கொடுத்தார். நெகட்டிவிட்டியை தூக்கித் தூரமாக எறிய நினைத்தவர், தன் கையில் இருந்த டாட்டூவை ‘பாசிட்டிவ்’ என மாற்றிக்கொண்டார்.

கசப்பான பக்கங்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டதால், அவரின் நண்பர்கள் வட்டத்தைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்து வைத்திருக்கிறார் நயன். யாரையும் எளிதில் நண்பராக்கிக் கொள்ளமாட்டார். அவரின் நட்பு வட்டத்துக்குச் சென்றுவிட்டால், எந்த நேரத்தில் எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பார்.

அஜித் மட்டுமல்ல, நயனும் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். குறிப்பாக, இவர் செய்யும் வால்நட் ப்ரவுனி கேக் நண்பர்களின் ஃபேவரைட். விக்னேஷ் சிவன் அவ்வப்போது நயனின் சமையல் குறித்து இன்ஸ்டாவில் சிலாகிப்பது உண்டு. அவரது சமையலில் நெய்ச் சோறும், சிக்கன் கிரேவியும் தான் விக்னேஷின் ஃபேவரைட்டாம்.

நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பயணத்தில் விக்னேஷ் சிவன் குறிப்பிடப்பட வேண்டிய நபர். லைஃப் பார்ட்னர் என்பது குடும்பம், குழந்தை என செட்டில் ஆவதற்கு மட்டும் கிடையாது. பரஸ்பரமான புரிதலோடு தங்கள் துணையின் தொழில் ரீதியான வளர்ச்சியிலும் தோள் கொடுக்க வேண்டும். இதற்கு விக்கி-நயன் ஜோடி சிறந்த எடுத்துக்காட்டு. காதல், பிரம்மாண்ட திருமணம், மாலத்தீவு தேனிலவு என வழக்கமான செலிபிரிட்டி ஜோடியாக இல்லாமல், தயாரிப்பு நிறுவனம், முதலீடு, சொந்தமாக பியூட்டி பிராண்ட் என்று தனி ரூட்டில் பயணிக்கின்றனர் விக்கி-நயன் ஜோடி.

‘ரவுடி பிக்சர்ஸ்’ என்னும் தயாரிப்பு நிறுவனம் விக்னேஷ் சிவன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இணைந்துதான் படங்களைத் தயாரித்து வருகிறார். இருவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்று, இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியலிலும் இணைந்திருக்கிறது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் வெற்றி இது. விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, கவினின் ‘ஊர்க்குருவி’ என ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் ஹிட்டடிக்கும் வாய்ப்பு ரொம்பவே அதிகம்.

நயன்தாராவுக்குள் ஒளிந்து கொண்டிருந்த பிசினஸ் உமனை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் வெற்றி தட்டி எழுப்பிவிட்டது. டீ எஸ்டேட், தென்னந்தோப்பு என முதலீடு செய்து வந்த நயன், இம்முறை விக்னேஷுடன் இணைந்து சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் `சாய் வாலா’ என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சில கோடிகளை முதலீடு செய்தார். தற்போது சொந்தமாக `தி லிப் பாம் கம்பெனி (The Lip Balm Company)' என்னும் அழகு சாதன பிராண்டையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ரெனிட்டா ராஜனுடன்...
ரெனிட்டா ராஜனுடன்...

இதற்காகப் பிரபல சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் கைகோத்திருக்கிறார் நயன். இது, உலகின் மிக அதிகமான லிப் பாம் ரகங்களை கொண்ட முதல் நிறுவனமாக இருக்கும். நயன்தாரா இந்த நிறுவனத்தைத் தொடங்க முக்கிய காரணம், அவருக்கு அழகு சாதனப் பொருட்களின் மீதுள்ள ஆர்வம் மட்டுமே. பணம், புகழ் இவற்றைத் தாண்டி தனக்கு பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதில் நயன் தெளிவானவர்.

பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் தொழில்முனைவோராக உருமாறி, ஸ்டார்ட் அப்கள் மற்றும் அழகுசாதன தொழில்களில் முதலீடு செய்வது டிரெண்டாகி விட்டது. இந்த ட்ரெண்ட் தென்னிந்திய பக்கமும் பரவி வருகிறது. கத்ரீனா கைஃப்பின் ‘கே பியூட்டி’, சன்னி லியோனின் ‘ஸ்டார் ஸ்ட்ரக்’ வரிசையில் நயன்தாராவின் ‘தி லிப் பாம்’ பியூட்டி பிராண்ட் இணைந்திருக்கிறது. பிசினஸில் கவனம் செலுத்தினாலும், கை நிறையப் படங்களுடன் ஷூட்டிங்கில் பிஸியாக இயங்கி வருகிறார் நயன்.

நாயகர்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில், நயன்தாராவின் இந்த 18 ஆண்டு கால திரைப் பயணம் என்பது அசாத்தியமானது. 2018-ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நடிகை, நயன்தாரா தான். சினிமா என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், பிசினஸ் வுமனாகவும் தன்னை முன்னிறுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நயன்தாரா!

Related Stories

No stories found.