நயன்தாராவின் ‘கனெக்ட்’: இடைவேளையின்றி இருக்கையில் கட்டிப்போடும் பேய்ப்படம்

நயன்தாராவின் ‘கனெக்ட்’: இடைவேளையின்றி இருக்கையில் கட்டிப்போடும் பேய்ப்படம்

நயன்தாராவின் புதிய திரைப்படமாக வெளியாகவிருக்கும் ’கனெக்ட்’, கதையின் சுவாரசியத்தில் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடுவதற்காக இடைவேளை விடாது திரையிடப்பட இருக்கிறது.

பிறந்தநாளை முன்னிட்டு இன்று வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் நயன்தாரா. திருமணம், இரட்டை குழந்தை பேறு ஆகியவற்றோடு திரைப்பயணத்திலும் தன் இடத்தை தக்கவைத்த மகிழ்ச்சியில் பயணத்தை தொடர்கிறார். பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய், நயன்தாரா நடிப்பில், சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் 2 திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளை நயனின் கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

முதலாவது ஹாரர் திரைப்படமான ’கனெக்ட்’. மாயா, கேம் ஓவர் என தனது முந்தைய படங்கள் வாயிலாக ரசிகர்களை பயமுறுத்திய இயக்குநர் அஸ்வின் சரவணன், கனெக்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா தோன்றுகிறார். 95 நிமிட நீளம் கொண்ட திரைப்படத்தின் இடையே ’இடைவேளை’ விட்டால் ரசனைக் குறைவாக வாய்ப்பாகும் என்பதால், இடைவேளை இன்றி இருக்கையில் கட்டிப்போட வருகிறது கனெக்ட்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. இரண்டாவது திரைப்படமாக ’என்டி-81’ என்று டம்மி தலைப்பிடப்பட்ட திரைப்படமும் அறிவிப்பாகி உள்ளது. எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதிலும் நயன்தாராவை முன்னிலைப்படுத்தியே கதை நெய்யப்பட்டுள்ளதாம். படத்தின் இதர நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் நயன் - சிவனின் குடும்ப நிறுவனமான ’ரௌடி பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. இன்று டீஸர் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படம், கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.22 அன்று நேரடி திரையரங்க வெளியீடாக வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in