`நயன்தாரா விளக்கம் அளிப்பதே அவரது ரசிகர்களுக்கு செய்யும் நீதி'- இரட்டைக் குழந்தை விவகாரத்தில் கேள்வி எழுப்பும் காங்கிரஸ்!

நயன்தாரா விக்னேஷ் சிவன்
நயன்தாரா விக்னேஷ் சிவன்

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து நான்கு மாதங்களிலேயே இரட்டைக் குழந்தை பிறந்திருந்தது. வாடகை தாய் மூலம் இத்தம்பதி குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நயன்தாராவே மெளனம் களைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஆர்.எஸ்.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் இதுகுறித்துக் கூறுகையில்,”அழகு, திறமை என அனைத்தையும் ஒருங்கே பெற்ற நபர்களில் நயன்தாராவும் ஒருவர். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை தினசரி சர்ச்சையாகத் தொடர்வது தான் வேதனையை தருகிறது.

இதில் உச்சகட்டமாக அவரது வாரிசு பிறப்பு வம்பை கிளப்பி இருப்பது தான் வேதனை. குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை செல்வத்தை அடைய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் தத்தெடுப்பு என்பது ஒரு முறை, செயற்கை கருவூட்டல் மறுமுறை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது மற்றொரு முறை. இதில் நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அக்டோபர் ஒன்பதாம் தேதி தங்களுக்கு நான்கு மாதத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்தபோது நாடே அதிர்ந்து போனது. இதன்மூலம் நயன்தாராவிற்கு குழந்தை பேரு அடையும் தகுதி இல்லையா? என்பது அதிர்ச்சி என்றால் இது எப்படி சாத்தியம் என்பது பேரதிர்ச்சி.

வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு அரசு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. இதை அவர்கள் கடைபிடித்தார்களா என்பது கேள்வியாக எழுந்துள்ளது. தனது கணவர் மூலம் வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் உயிர் அணுவை செலுத்தி அது சில மாதம் வளர்ந்து நல்ல கருவாக உருவாகி அது இரட்டை குழந்தைகளாக வளர்ந்து, உறுதியான பிறகு அவர்கள் திருமணத் தேதி அறிவித்து கரம்பிடித்தது தான் இப்போது சர்ச்சை. இவ்விசயத்தில் உண்மை தன்மை என்ன என்பதை தமிழக அரசு விசாரிக்கிறது என்று கூறியிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

ஆனாலும் உடல்ரீதியான குறைபாட்டால் இது நடந்ததா? அல்லது குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு குறைந்து விடும் என்பதால் நயன்தாரா வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டாரா என பலர் சந்தேகப்படுகிறார்கள். நயன்தாராவே இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதே அவரை ரசிக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அவர் செய்யும் நீதி” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in