தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலசந்தர் உள்ளிட்ட சில இயக்குநர்கள் படங்களை இயக்கியதுடன் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டனர். எம்ஜிஆர், ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதலான படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்தார். பிற்காலத்தில், பாக்யராஜ் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்தார். இந்தப் பட்டியல் கொஞ்சம் வித்தியாசமானதுதான். இயக்குநரும் நடிகருமான எம்.சசிகுமார், தன் முதல்படத்தை அவரே தயாரித்தார். இயக்கினார். நடிக்கவும் செய்தார். 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ கொடுத்த தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை திரையுலகமும் ரசிகர்களும்!
மதுரை ஒத்தக்கடை அருகே, திருமோகூருக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் சசிகுமார். தாத்தா ஜவுளிக்கடை வைத்திருந்தார். ஒத்தக்கடையில் தியேட்டரும் வைத்திருந்தார். கொடைக்கானல் கான்வென்ட்டில் சசிகுமார் படித்தார். அந்தப் பள்ளியில், வாரந்தோறும் திரைப்படங்களைத் திரையிடுவார்கள். சத்யஜித் ரே முதலானவர்களின் படங்கள் அங்கே திரையிட்டுக் காட்டப்பட்டன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சசிகுமாருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின.
பள்ளி வகுப்பு. ’எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்?’ என்று ஆசிரியர் கேட்க, ஒவ்வொருவரும் பதில் சொன்னார்கள். சசிகுமார் எழுந்து நின்றார்... ‘சினிமா டைரக்டராவேன்’ என்று சொன்னார். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், தன் பள்ளிப்பருவத்துக் கனவை, கல்லூரியெல்லாம் முடித்துவிட்டு, நிகழ்த்திக் காட்டியபோது, அவரின் பள்ளித் தோழர்களும் ஆசிரியர்களும் வியந்துபோய் பாராட்டினார்கள்.
‘சேது’ படத்தின் தயாரிப்பாளர், சசிகுமாரின் உறவினர். ‘இந்தப் படத்துல இவனையும் அசிஸ்டென்டா சேத்துக்க தம்பி’ என்று இயக்குநர் பாலாவிடம் சொல்ல, அங்கே ஆரம்பமானது சசிகுமாரின் திரைப்பயணம்.
‘சேது’வின் மூலம் இயக்குநர் அமீரின் நட்பும் அன்பும் கிடைத்தது. பாலாவிடம் இருந்து வெளியே வந்த அமீரிடம், ‘மெளனம் பேசியதே’ படத்திலும் ‘ராம்’ படத்திலும் பணியாற்றினார்.
கொஞ்சம்கொஞ்சமாக சினிமாவின் பல முகங்களையும் தொழில்களையும் கற்றுக்கொண்டார். அந்தச் சமயத்தில் தாமே படத்தைத் தயாரிப்பது என்பதில் உறுதியானார். ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கதையை ஓரமாக வைத்துவிட்டு, புதிய கதையை உருவாக்கினார். தமிழகத்தின் பல ஊர்களிலும் ‘சுப்ரமணியபுரம்’ என்ற பெயரில் ஒரு ஏரியா இருக்கும் என்பதை உணர்ந்த சசிகுமார், படத்துக்கு ‘சுப்ரமணியபுரம்’ என்று பெயரிட்டார்.
அமீரிடம் இருந்தபோது பழக்கமான சமுத்திரகனியை, நடிகராக அறிமுகப்படுத்தினார். ஜெய்க்கு பிரமாதமான கதாபாத்திரத்தை வழங்கினார். நான்கு நண்பர்கள், ஊர் சுற்றுதல்,கலகலப்புடன் இருப்பது என்று எண்பதுகளில் பலரும் கையாண்டதை, எண்பதுகளிலேயே நிகழ்வது போல் எடுத்து, அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்ற விதத்தில், இயக்குநர் சசிகுமார் ஜெயித்தார். தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். நடிகராகவும் ஈர்த்தார்.
கதையிலும் கதை சொன்ன பாணியிலும் கவனம் ஈர்த்த இயக்குநரானார் சசிகுமார். வடக்கே உள்ள அனுராக் காஷ்யப் வரை பலருக்கும் ‘சுப்ரமணியபுரம்’ தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து, தன் கம்பெனியான ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ மூலம் படங்களைத் தயாரித்தார். சேரன் முதலானவர்களிடம் உதவியாளராக இருந்த பாண்டிராஜின் இயக்கத்தில், ‘பசங்க’ என்றொரு படத்தைத் தயாரித்தார். பள்ளிப் பையன்களை வைத்து இப்படியொரு படத்தைக் கொடுக்க ஏகத்துக்கும் துணிச்சலும் நம்பிக்கையும் வேண்டும். அது பாண்டிராஜுக்கும் சசிகுமாருக்கும் அது ரொம்பவே இருந்தது. மிகப்பெரிய வெற்றியையும் விருதுகளையும் அள்ளியது ‘பசங்க’ திரைப்படம்.
சமுத்திரக்கனிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து, தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயபிரகாஷின் மகனான வாலிபனை ஹீரோவாக்கி ‘ஈசன்’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தைத் தயாரித்த சசிகுமார் அதில் நடிக்கவில்லை. ஏனோ அப்படம் பெரிய வெற்றியைச் சந்திக்கவில்லை. சிவகங்கை அருகே உள்ள ‘ஈசனூர்’ எனும் கிராமத்தில்தான் சசிகுமாரின் குலதெய்வக் கோயில் இருக்கிறது. அந்த ஊரின் பெயரைக் குறிப்பிடும் விதமாகத்தான் ‘ஈசன்’ எனப் பெயரிட்டார். ‘ஒருவேளை சசிகுமார் நடிப்பார்’ எனும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்கூட பட வெற்றிக்கு பக்கபலம் சேர்க்கவில்லையோ என்னவோ?
சமுத்திரகனியும் சசிகுமாரும் நண்பர்களானார்கள். ஆனாலும் அண்ணன் தம்பியாக இன்னமும் பழகிவருகிறார்கள். வெங்கட் பிரபுவை வைத்து ஒரு படம், விஜயகாந்தை வைத்து ‘நெறஞ்ச மனசு’ கொடுத்திருந்தாலும் சசிகுமாரை நடிக்கவைத்து ‘நாடோடிகள்’ படத்தை இயக்கினார் சமுத்திரகனி. காதலுக்கு உதவி செய்யும் நண்பர்கள், காதலர்கள் பிரியும்போதும் கண்டிப்பார்கள் எனும் கான்செப்ட் புதிதாக இருந்தது. நட்பு, நண்பர்கள், காதல், துரோகம் என்று சசிகுமார் படங்களுக்கு ஒரு வண்ணம் கொடுக்கப்பட்டது அப்போதுதான்.
ரவுடியிஸமும் அரிவாளும் கத்தியும் ரத்தமுமாக ‘சுப்ரமணியபுரம்’ ஆண் ரசிகர்களைக் கவர்ந்ததென்றால், காதலைச் சேர்த்து வைத்த விதத்தில், ‘நாடோடிகள்’ பெண் ரசிகைகளை இவர் பக்கம் கொண்டுவந்து சேர்த்தது. ‘சுந்தரபாண்டியன்’ இன்னும் அடுத்தகட்டத்துக்கு இவரை அழைத்துச் சென்றது. சசிகுமாரின் காஸ்ட்யூம் சென்ஸ் பார்த்து, அப்படியான உடைகளைப் போட்டுக்கொண்டு, முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு ஸ்டைல் காட்டினார்கள் இளைஞர்கள். ஒரு நடிகராக, ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டார்கள். கமர்ஷியல் ஹீரோவானார் சசிகுமார்.
கிராமத்துக் கதைகள் என்றால் அதற்குப் பொருத்தமானவர் என்று இயக்குநர்கள் சசிகுமாரைத் தேர்வு செய்தார்கள். ‘வெற்றிவேல்’, ‘பலே வெள்ளையத்தேவா’ என்று வரிசையாக படங்கள் வந்தன. முன்னதாக ‘போராளி’, ‘குட்டிப்புலி’ என்றெல்லாம் படங்கள் வந்தன. விளையாட்டை மையமாகக் கொண்டு ‘கென்னடி கிளப்’ மாதிரியான படம், நகரத்தை மையமாகக் கொண்டு ‘பிரம்மன்’ படம் என வித்தியாசமான கதைக் களம் கொண்ட படங்களில் நடித்தார்.
’கிடாரி’யில் அட்டகாசமாகப் பொருந்தினார். ‘குட்டிப்புலி’ கதாபாத்திரமும் இவருக்கு அழகாகவே பொருந்தியது. கெளதம் வாசுதேவ் மேனனின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வில் ஒரு மாதிரியும் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இன்னொரு மாதிரியும் முகம் காட்டி அசத்தினார். தாடி வைத்த நாயகர்கள் இவர் வரும் சமயத்தில் அரிதுதான். இவர் வந்த பிறகு, தாடியுடன் வலம் வரும் நடிகர்களும் அதிகரித்துவிட்டார்கள். நான்கு நண்பர்கள் கான்செப்ட்டும் அதிகரித்துவிட்டது.
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தயாரித்த பெருமையுடன், இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கி நடித்த ‘தலைமுறைகள்’ படத்தை, அவர் மீது கொண்ட அன்புக்காகவும் மரியாதைக்காகவும் தயாரித்த பெருமையும் சசிகுமாருக்கு உண்டு.
‘ராஜவம்சம்’, ‘உடன்பிறப்பே’ என வரிசையாகப் படங்கள் பண்ணிக்கொண்டே இருப்பது ப்ளஸ் என்றால், இன்னும் கொஞ்சம் கதைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் இன்னுமாக ப்ளஸ்ஸாக அமைந்துவிடும் இவருக்கு! ‘சுப்ரமணியபுரம்’ படத்திலிருந்தே மலையாளத்திலும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை இன்று வரை அங்கே வெளியிடப்படுகிற இவரின் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு உறுதி செய்தபடி இருக்கிறது.
இயல்பான மனிதர் என்றும் நன்றியுள்ள மனிதர் என்றும் மனிதநேயமிக்கவர் என்றும் இவரைக் கொண்டாடுகிறார்கள் திரையுலகத்தில் பலரும்! ‘நெல்’ ஜெயராமன் குடும்பத்துக்கு உதவி செய்வார். விளையாட்டு வீராங்கனைக்கு உதவுவார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வார். பள்ளியில் இவருக்கு இசை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் வசந்தனை, தன் முதல் படத்திலேயே இசையமைப்பாளராக்கினார்.
படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் அங்கே இருப்பார். மற்ற சமயங்களில், மதுரையில் குடும்பத்தாருடன் இருப்பார். குடும்பத்துக்குள் சினிமா வெளிச்சங்களைக் கொண்டுவருவதில் விருப்பமில்லை என்கிறார் சசிகுமார்.
தமிழ் சினிமாவில் நட்பைச் சொல்லி குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்தவர் அநேகமாக சசிகுமாராகத்தான் இருக்க வேண்டும். இயல்பிலும் சசிகுமாரின் நட்பு வட்டம் பெரிதுதான்.
‘’படமெல்லாம் தயாரிக்காதீங்க. மாட்டிக்காதீங்க. நிறைய படங்கள் நடிங்க. ‘சுப்ரமணியபுரம்’ மாதிரி நல்ல, வித்தியாசமான படங்கள் டைரக்ட் பண்ணுங்க’’ என்று ‘பேட்ட’ படத்தில் நடித்தபோது ரஜினி அட்வைஸ் செய்திருக்கிறார்.
ரஜினியின் ஆசையும் ரசிகர்களும் நிறைவேறும் விதமாக, ‘ஈசன்’ படத்துக்குப் பிறகு மிகப் பிரமாண்டமான முறையில் ‘குற்றப்பரம்பரை’யை இயக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் சசிகுமார்.
எல்லோருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிற சசிகுமாருக்கு இன்று பிறந்தநாள். நட்பின் நாயகன் சசிகுமாரை வாழ்த்துவோம்!