‘இந்திய திரையுலகுக்கு இன்று திருவிழா’ -நாசர் நெகிழ்ச்சி

ஆஸ்கர் வென்ற இந்திய படைப்புகள்
ஆஸ்கர் வென்ற இந்திய படைப்புகள்

இந்தியாவின் இரு திரைபடைப்புகள் ஆஸ்கர் விருது வாங்கியதற்காக, அதன் படைப்பாளர்களுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் அநேகம் சக கலைஞர்கள் சார்பிலானவை. அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் எம்.நாசரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற, 95வது அகடமி விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்தியர்கள் மத்தியில் கொண்டாட்ட மனநிலையை தந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒரு திரைப்படம் மற்றும் 2 குறும்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியிட்ட நிலையில் 2 விருதுகளை இந்திய படைப்புகள் உறுதி செய்தன. எதிர்பார்த்தது போலவே ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. மேலும் ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதினை பெற்றது.

இந்த படைப்புகளையும், அதன் படைப்பாளர்களையும் வாழ்த்துவோர் மத்தியில் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்திருக்கிறது. இதன் தலைவர் நாசர் வெளியிட்ட வாழ்த்தில், “இந்திய திரையுலகம் இன்று திருவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் இந்திய சினிமாவை கொண்டு சேர்த்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று பெருமை சேர்த்திருக்கிறது.

இயக்குனர் கார்திகி கன்சல்வாஸ் தலைமையில் உருவான ’தி எலிஃபெண்ட் விஸ்பெரெர்ஸ்’ சிறந்த ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இது பல இளம் படைப்பாளிகளை ஊக்கமடைய செய்திருக்கிறது. ராஜமவுலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில், கீரவாணி இசையமைப்பில் சந்திரபோஸின் பாடல் வரிகளில் அமைந்த ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான விருது பெற்று திரையுலகையே நடனமாட வைத்திருக்கிறது.

ஆஸ்கர் விருதுகளை படைத்திட்ட இரு உன்னத படைப்பாளர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து பெருமை கொள்கிறது’ என்று வாழ்த்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in