50 திரையரங்கங்களுக்கு மூடுவிழா; ஆந்திராவில் நடப்பது சரியல்ல - நானி ஆவேசம்

50 திரையரங்கங்களுக்கு மூடுவிழா; ஆந்திராவில் நடப்பது சரியல்ல - நானி ஆவேசம்

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, அங்குள்ள திரையரங்குகளில் குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது. இதற்குச் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படத்தின் புரமோஷன் விழாவுக்கு வந்த நானியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “ஆந்திராவில் நடப்பது சரியாக இல்லை. நம் அனைவருக்கும் இது தெரியும். அரசியல்வாதிகள் பார்வையாளர்களை அவமானப்படுத்துகிறார்கள். 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என டிக்கெட் கட்டணம் இருப்பதைப் பார்க்கிறேன்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “ஒரு மளிகைக்கடையைவிட பத்து பேருக்கு வேலை கொடுக்கும் திரையரங்கம் பெரியது. ஆனால், மளிகைக்கடைக்கு வரும் வருமானம் திரையரங்குகளுக்கு இல்லை. நினைத்துப் பாருங்கள். பள்ளியில் எல்லா மாணவர்களும் சுற்றுலா செல்ல 100 ரூபாய் தரும்போது, உன்னால் அது முடியாது நீ 10 ரூபாய் தந்தால் போதும் என்பது என்னை அவமானப்படுத்துவது இல்லையா” என்று கேட்டார்.

ஆந்திர அரசின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணக் குறைப்பு முடிவால் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படங்களின் வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’ நேற்று வெளியாகியுள்ளது. ஜனவரியில் வெளிவரவிருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீம்லா நாயக்’, ‘ராதே ஷ்யாம்’ போன்ற பிரமாண்ட திரைப்படங்களும் பாதிக்கப்படும் என்று தெலுங்கு திரையுலகத்தினர் கவலையில் உள்ளார்கள். இப்போதே, மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஆந்திர அரசின் இந்த முடிவை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.