`பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் `நானே வருவேன்’?

`பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் `நானே வருவேன்’?

‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகும் அதே தேதியில் ‘நானே வருவேன்’ படமும் வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ஐஷ்வர்யா ராய், ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த மாதம் இறுதியில் அதாவது செப்டம்பர் 30 அன்று திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாளை மாலை சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்த மாத இறுதியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மட்டுமே வெளியாக இருந்த நிலையில், தனுஷின் ‘நானே வருவேன்’ படமும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் ‘மயக்கம் என்ன’. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் ‘நானே வருவேன்’ படம் மூலம் இணைந்திருக்கிறது. அதனால், இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இந்த மாதம் 11-ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை படத்தை பற்றிய அப்டேட் வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார்.

’வி கிரியேஷன்ஸ்’ தாணு தயாரிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். செல்வராகவன் நடிகராக முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in