நந்தமுரி தாரக ரத்னா: ஆந்திராவிலும் மீளாத் துயர்!

நந்தமுரி தாரக ரத்னா
நந்தமுரி தாரக ரத்னா

தமிழ் திரையுலகை நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம் துயரத்தில் ஆழ்த்தியது போன்று, தெலுங்கு சினிமாவிலும், நடிகரும் அரசியல் பிரமுகருமான நந்தமுரி தாரக ரத்னாவின் எதிர்பாரா மரணம், மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா. இவர் தெலுங்கு சினிமாவின் பிதாமகனும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மருமகனும் ஆவார்.

நந்தமுரி தாரக ரத்னா சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். அந்த வகையில் சித்தூர் மாவட்டத்தில் ஜனவரி 27 அன்று கட்சிக்கான நடைபயணம் ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

பெங்களூரு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமானார். இவருக்கு ஆலக்யா ரெட்டி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது தந்தையான நந்தமுரி மோகன் கிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்படுபவர்.

சினிமா மற்றும் அரசியலில் சாதனைகள் படைப்பதற்கான எதிர்காலம் காத்திருந்த சூழலில், 39 வயதில் நந்தமுரி தாரக ரத்னா மரணமைந்திருப்பது சக திரையுலக மற்றும் அரசியல் நண்பர்களையும், ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in