ஜாக்கி ஷெராப் - ரஜினி காந்த்
ஜாக்கி ஷெராப் - ரஜினி காந்த்

அனுமதியின்றி எனது குரல், பெயர், ஆளுமையை பயன்படுத்தக் கூடாது... ரஜினி காந்த் பாணியில் பாய்ந்த பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தனது குரல், உருவம் உள்ளிட்ட ஆளுமையின் பல்வேறு கூறுகளை அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்கிறார்.

தனது பெயர், உருவம், குரல் மற்றும் ஆளுமையின் பல்வேறு தனித்துவமான பண்புகளை இணையத்திலும், வர்த்தகத்திலும் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தாக்கல் செய்த வழக்கை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

ஜாக்கி ஷெராப்
ஜாக்கி ஷெராப்

சுவரோவியம், கலைப்பொருட்கள், டி-ஷர்ட் மற்றும் ஜாக்கி ஷெராப்பின் படங்களைத் தாங்கிய போஸ்டர்கள் போன்றவற்றை பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்வதாக ஜாக்கி ஷெராப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பெயர், உருவம், தோற்றம், குரல் மற்றும் பிற பண்புகளை உள்ளடக்கிய ஒரு பிரபலத்தின் ஆளுமையின் கூறுகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜாக்கி ஷெராஃப்பின் வழக்கறிஞர் வாதிட்டார்.

ஜாக்கி ஷெராப் ஆளுமையின் கூறுகளை வர்த்தக ரீதியில் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதும், அதற்கான முறையான அனுமதியை சம்மந்தப்பட்ட பிரபலத்திடம் பெறாததும் குறித்து ஜாக்கி ஷெராப் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதிலும் ஜாக்கி ஷெராப்பின் கையொப்பமிடப்பட்ட படங்களை விற்பது அவரது ஆளுமை உரிமையை மீறுவதாகவும், இ-காமர்ஸ் இணையதளங்கள் அத்தகைய பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

ஜாக்கி ஷெராப் தரப்புக்கு செவிசாய்த்த டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. இதன்படி ஜாக்கி ஷெராப் ஆளுமையின் கூறுகளை அவரது அனுமதியின்றி வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை சந்தையிலிருந்து நீக்குவதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்.14ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக, இதே போன்று தனது குரல், பெயர், உருவம் ஆகியவற்றை முறையான அனுமதி பெறாது பயன்படுத்துவோருக்கு எதிராக நடிகர் ரஜினி காந்த் தனது வழக்கறிஞர் வாயிலாக சட்டபூர்வமான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் ஆத்ம நண்பரான ஜாக்கி ஷெராப்பும் அதே வழியில் பாய்ச்சல் காட்டியிருப்பதோடு, நேரடியாக நீதிமன்றம் மூலமாக தடையும் பெற்றுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in