நளினி எனும் நட்சத்திரம்!

நடிகை நளினி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
நளினி எனும் நட்சத்திரம்!

எண்பதுகளில் ஏகப்பட்ட நடிகைகள் அறிமுகமானார்கள். இவர்களில் சிலர் நாயகிகளாக அறிமுகமாவதற்கு முன்பு ஒன்றிரண்டு படங்களில், இரண்டு மூன்று காட்சிகள் மட்டுமே வந்துபோனார்கள். அவர்கள் அறிமுகமாகி, நம் மனங்களில் இடம் பிடித்த பிறகு, அந்த இரண்டு மூன்று காட்சிகளில் வந்த படத்தைப் பார்க்கும்போதுதான், ‘அட... இங்கே பார்றா’ என்று கவனத்தில் கொண்டு ரசித்தார்கள் ரசிகர்கள். சத்யா மூவீஸின் ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்தார்கள். 1981-ம் ஆண்டு வந்த இந்தப் படத்தில், ரஜினியின் தங்கையாக அந்த நடிகை நடித்திருந்தார். அப்போது எவரின் பார்வையும் அவர் மீது விழவில்லை. ஆனால் நாயகியான அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து ஜமாய்த்து, தனக்கென ரசிகர் கூட்டத்தைப் பிடித்துக்கொண்டார். அந்த நடிகை... நளினி.

அப்பா மூர்த்தி திரைத் துறையில் நடன இயக்குநர். அம்மா பிரேமாவும் நடனத் துறையில் இருந்தவர்தான். நடனமும் சினிமாவும் சேர்ந்துதான் நளினியை சிறுவயதிலிருந்தே வளர்த்தது. கூடப்பிறந்தவர்கள் ஆறுபேர். ஏழு குழந்தைகளில் நளினி இரண்டாவதாகப் பிறந்தார். ஏழாவது படிக்கும் வரை படிப்பு, நடனம் என்று போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், திரைப்பட வாய்ப்பும் சேர்ந்துகொண்டது. அந்த வயதில் சின்னச்சின்ன வேடங்கள் கிடைத்தன. தமிழும் மலையாளமுமாக வாய்ப்புகள் வந்தன. படிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு, சினிமாதான் எல்லாமே எனும் முடிவுக்கு அவர்களின் குடும்பம் வந்தது.

இன்னும் கொஞ்சம் வயது ஏறியதும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் வரவில்லை.

‘ஒருதலை ராகம்’ படத்தில் பணியாற்றி, ‘வசந்த அழைப்புகள்’, ‘இரயில் பயணங்களில்’ என்றெல்லாம் எடுத்தாலும் ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருந்தார் டி.ராஜேந்தர். அந்தச் சமயத்தில்தான், துள்ளத்துடிக்கிற காதல் கதையைத் தேர்வு செய்தார். அவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் காதல் படங்களாகத்தான் அப்போது இருந்தன.

இந்தப் படம் எல்லாப் படங்களையும் விட ரொம்பவே ஸ்பெஷல். ‘ஒருதலைராகம்’ காதலைச் சொல்லி நம்மையெல்லாம் கலங்கிக் கதறடித்தவர், இந்த முறை, டீன் ஏஜ் குரூப்பை உற்சாக மூடுக்குக் கொண்டுவந்தார். அவர்களின் மனநிலையை அப்படியே திரையில் விரியச் செய்ய நாயகனும் நாயகியும் தேவைப்பட்டார்கள். இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாயகன்... கங்கா. நாயகி... நளினி. அந்தப் படம்... ‘உயிருள்ளவரை உஷா’.

அகலமான கண்களும் சுருள்சுருள் முடியும் பற்கள் தெரியச் சிரிக்கின்ற முத்துச்சிரிப்புமாக வலம் வந்த நளினியை வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவருக்காகவே அந்தப் படத்தைத் திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். நீண்டநேரம் க்யூவில் நின்று, காத்திருந்து, டிக்கெட் கிடைக்காவிட்டாலும் கூட அடுத்த காட்சியையோ மற்றுமொரு நாளில் இன்னொரு காட்சியையோ வந்து திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். நூறுநாளைக் கடந்தும் ‘ஹவுஸ்புல்’லாக ஓடியது. டீக்கடைகளிலும் ஹோட்டல்களிலும் சைக்கிள் கடைகளிலும் டெய்லர் கடைகளிலும் படத்தின் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டே இருந்தன. நளினியைப் பற்றி வியப்பு மாறாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அடுத்தடுத்து படங்கள்... இராம.நாராயணனின் ‘நன்றி’ முதலான நிறைய படங்கள். மீண்டும் டி.ராஜேந்தரின் ‘தங்கைக்கோர் கீதம்’ நாயகியானார். இந்த முறை கல்லூரியில் புரமோஷனாக குடும்பத்தலைவி வேடம்.

தன் முதிர்ந்த நடிப்பை ஆரம்பக்கட்டத்திலேயே வெளிப்படுத்தி, அதிலும் ‘அப்ளாஸ்’ அள்ளினார். ஒவ்வொரு இயக்குநரும் கதையைத் தேர்வு செய்யும்போதே, நாயகியாக நளினியையும் தேர்வு செய்தார்கள்.

ஒரு படத்தில் பணக்காரப் பெண்ணாக வருவார். இன்னொரு படத்தில் ஏழை வீட்டுப் பெண்ணாக வருவார். மற்றொரு படத்தில் நாகரிகப் பெண்ணாக ஸ்டைல் ஆடைகளுடன் வருவார். இன்னுமொரு படத்தில் பாவாடையும் தாவணியுமாக வருவார். எல்லாவற்றிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.

எண்பதுகளில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், முரளி, அர்ஜூன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நாயகர்களாக இருந்த நிலையில், கமல், ரஜினியைத் தவிர்த்து எல்லா நடிகர்களுடனும் ஒரு ரவுண்டு வந்தார். அன்றைக்கு சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்த எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நளினி நடித்தார். அப்படிப் பார்த்தால், வருடத்தில் சராசரியாக எட்டு படங்களில் இவர்தான் நாயகி.

‘'படத்துக்கு நளினியை புக் பண்ணினா, நமக்கு எந்தத் தலைவலியும் வராது. எட்டு மணிக்கு ஷூட்டிங்னா, ஏழேகாலுக்கெல்லாம் வந்து நின்னுருவாங்க. டேக் வாங்கமாட்டாங்க. நான் ஒரே சமயத்துல ஆறேழு படங்கள் டைரக்ட் பண்றவன். என்னைப் போலவே நளினியும் வேகமா நடிச்சுக் கொடுத்துருவாங்க. அதனால நளினி என்னோட நிறைய படங்கள்ல நடிச்சாங்க’’ என்று மறைந்த இராம.நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டார்.

சில நடிகர்களும் சில நடிகைகளும் இணைந்து நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நளினியிடம் உள்ள ஸ்பெஷல். எந்த நடிகருடன் நடித்தாலும் அதற்குப் பொருத்தமான நாயகியாக தன்னை உருமாற்றிக்கொள்வார். மணிவண்ணன் இயக்கிய ‘நூறாவது நாள்’ படத்துக்கு அப்போது விமர்சனம் எழுதிய பத்திரிகைகள், ‘படத்தில் பாதி பயத்தை இளையராஜாவின் இசையும் மீதி பயத்தை நளினியின் விழிகளுமே நமக்குக் கடத்திவிடுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தன.

’இசைபாடும் தென்றல்’ படத்தில் சிவகுமாருடன் நடித்தார். ‘மனைவி சொல்லே மந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் மோகனுடன் நடித்தார். ‘நாளை உனது நாள்’ உட்பட விஜயகாந்துடன் பல படங்களில் நடித்தார். ‘கரிமேடு கருவாயன்’ படத்தில் ஆகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார்.

இளையராஜாவின் சொந்தப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். இதிலும் நாயகியாய் நடித்து அசத்தினார். ’ஓசை’ படத்தில் மோகனுடன் நடித்தார். அதில் தன் நடிப்புத்திறனை முழுவதுமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அமைந்தது அவருக்கு. இந்த நிலையில் மலையாளப் பக்கமும் போனார். மோகன்லால் முதலான நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் நளினி நடித்த ‘சாதனை’ அவரின் வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் பல இடங்களில் தன் நடிப்பால் ஜெயித்தார். அதேபோல், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், கமல் நடிக்காமல் வேறொரு நாயகன் நடித்து வந்த முதல் படம்... ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. ஜீவிதா, கீதா, நளினி என மூவரும் நடித்திருப்பார்கள். பிராமணப் பெண்ணாக, தம்பியைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் பெண்ணாக, வில்லனுக்கு அடைக்கலம் கொடுத்துவிட்டு கையறு நிலையில் தவித்து மருகுபவராகக் கலங்கடித்திருப்பார் நளினி.

90-களின் பிற்பகுதியில் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதேசமயத்தில் அவரின் திருமணம், குழந்தைகள், குடும்பம் என கடமைகளும் இருந்தன. காயங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்டார். எவரையும் காயப்படுத்தாமல், புறம் பேசாமல் விலகி வந்தார்.

அதையடுத்து ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்பது போல், மீண்டும் வாய்ப்புகள் வந்தன. இந்த முறை தொலைக்காட்சித் தொடர் அவரை வரவேற்று, எல்லார் வீட்டு ஹாலிலும் கம்பீரமாக உட்காரவைத்தது.

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ முதலான சீரியல்களில் காமெடிகளிலும் புகுந்து ரவுசு பண்ணினார் நளினி. அதேபோல் படங்களும் வந்தன. அம்மா வேடம், அண்ணி வேடம் என எந்த வேடம் கிடைத்தாலும் தன்னை அதில் மிக அழகாகப் பொருத்திக்கொள்ளும் திறமை கொண்டவராகத் திகழ்ந்தார்.

’லண்டன்’ படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்துகொண்டு இவர் செய்யும் லூட்டியில் அந்த வைகைப்புயலே லொகேஷனில் வெடித்துச் சிரித்திருப்பார். கண்ணீர் கதாபாத்திரத்துக்கு ஒரு உடல்மொழி, காமெடிக்கு ஒரு உடல்மொழி என தன்னைப் பாத்திரமாகவே வார்த்துக்கொள்வதால்தான், இன்றைக்கும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் முக்கியமாக நம் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கிறார் நளினி.

உழைப்புக்குக் கிடைத்த வெற்றி, திறமைக்குக் கிடைத்த வெற்றி, ஆத்மார்த்தமாகத் தன்னை கதைக்குள் ஒப்படைத்ததற்கு வெற்றி என்று நளினியைச் சொல்லலாம்.

ஆத்மார்த்த நாயகி நளினிக்கு இன்று பிறந்தநாள். இன்னும் வாழ்வில் ஜொலிக்கவும் ஜெயிக்கவும் வாழ்த்துவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in