நகைச்சுவை நாயகன்: காமெடி கைப்புள்ள... வடிவேலு!

- வைகைப்புயலின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!
நகைச்சுவை நாயகன்: காமெடி கைப்புள்ள... வடிவேலு!

சினிமாவில், நடிகர்களுக்கென்று ஒரு முத்திரை குத்தப்பட்டிருக்கும். நாயகன், வில்லன், குணச்சித்திரம் என்றெல்லாம் வகைதொகை பிரித்துப் பார்க்கப்பட்டு அதன்படி கொண்டாடுவோம். ‘இவரைப் பிடிக்கும், அவரைப் பிடிக்காது’ என்று இந்தப் பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டு, கட்சி பிரித்துப் பேசுவோம். ஆனால், எல்லைகளே இல்லாதவர்களும் பாரபட்சமே இல்லாமல் எல்லோராலும் பார்க்கப்படுபவர்களும் நகைச்சுவை நடிகர்கள்தான்!

கலைவாணரையும் கொண்டாடுவோம். சந்திரபாபுவையும் ரசிப்போம். தங்கவேலுவின் நகைச்சுவைக்கும் சிரிப்போம். நாகேஷின் கலாட்டாக்களையும் கண்டு குதூகலிப்போம். இப்படி வரிசையாக எத்தனையோ காமெடி நடிகர்களை நாம் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், நகைச்சுவையிலும் தனிச்சுவை சேர்த்து, தனித்துவம் காட்டி வெளுத்துக் கட்டிய நடிகர்களில், மிக முக்கியமானவர் வைகைப் புயல் வடிவேலு.

பேரைச் சொன்னாலே குபுக்கென்று சிரிப்பு வருகிற நடிகர்களில் வடிவேலுவும் ஒருவர். தமிழ் சினிமா காமெடி நடிகர்களில், வடிவேலு அடைந்த உச்சம் புது தினுசு. நாகேஷ் விட்ட இடத்தை வடிவேலுதான் நிரப்பினார் என்று திரையுலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. “அப்படியெல்லாம் இல்ல. நாகேஷ் ஐயா, பெரிய கடல். நான் சின்னக் குட்டை” என்று தன்னடக்கத்துடன் வடிவேலு சொன்னாலும், அவர் அடைந்த வெற்றியும் கிடைத்த கைதட்டல்களும் உயரங்களும் அசகாயசூரத்தனம்தான்!

மதுரையில் பிறந்து, ஒரு எட்டுப்பத்துத் தெருவுக்குத் தெரிகிற மாதிரி பரபர சுறுசுறுவென இயங்கிக் கொண்டிருந்த வடிவேலு, ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆளப்போகிறோம் என்று ஜோதிடக்காரர்கள் சத்தியம் செய்திருந்தாலும் நம்பியிருக்க மாட்டார். ஆனால், “சினிமால சேர்ந்து நடிக்கலாம்டா நீ” என்று நண்பர்களும் சுற்றியிருந்தவர்களும் தூபம் போட, சென்னைக்கு வந்து அலை அலை என அலைந்தார். பின்னால், நகைச்சுவையில் பெரும்புயலையே உருவாக்கப் போகிறோம் என்பதே தெரியாமல் அலைந்தார். அவரைப் பலரும் புறக்கணித்தனர்.

தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான ராஜ்கிரண், வடிவேலுவை தன் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக்கொண்டார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சின்னதாக ஒரு கேரக்டரும் கொடுத்தார். 'போடா போடா புண்ணாக்கு’ எனும் பாடலில் ஆடிப்பாடி நடிக்கவும் செய்தார் வடிவேலு. 'தொறந்திருக்கும் கேட்டு அது என்னுடைய ரூட்டு வெடிக்கிதொரு வேட்டு அது பாவலரு பாட்டு’ என்று அந்தக் கணம், வடிவேலுவின் திரைவாழ்வுக்கான கதவு திறந்தது. வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக சரவெடிவேலுவாக மாறிக்கொண்டே வந்தார்.

‘எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டக் கேக்கும்’ என்று சொந்தக் குரலில் பாடி நடிக்க வாய்ப்பைத் தந்தார் ராஜ்கிரண். ‘யாருடா இது’ என்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். அப்போதைய முக்கிய இயக்குநர்களின் கண்களில் பட்டார் வடிவேலு. ஆர்.வி.உதயகுமாரின் படங்களில் நடித்தார். கமலுடன் ‘சிங்காரவேலன்’ படத்தில், இவரின் நடிப்பையே கூர்ந்து கவனித்தார் கமல். ‘நாளைக்கி ராஜ்கமல் ஆபீஸ் வாங்க’ என்று வரச்சொல்லி, ‘தேவர்மகன்’ இசக்கி பாத்திரத்தை வழங்கினார். பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ இவரின் நகைச்சுவையை இன்னும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்தப் படத்திலேயே ‘கறுப்பு நாகேஷ்’ என பாரதிராஜா அடைமொழி கொடுத்தார்.

குடும்பக் கதையுடன் காமெடியையும் சேர்த்துக் கொடுக்கும் இயக்குநர் வி.சேகருக்கு, வடிவேலுவின் காமெடி ரொம்பவே பிடித்துப் போனது. தன் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினார். வடிவேலுவும் விவேக்கும் சேர்ந்து கலக்கினார்கள்.

பொதுவாகவே, ஒரு நடிகருக்கு வசன உச்சரிப்பு முக்கியம். பாடி லாங்வேஜ் என்கிற உடல்மொழி மிக மிக முக்கியம். முகபாவனைகள் இன்னும் இன்னும் முக்கியம். வடிவேலுவுக்கு தூரத்தில் கேமராவை வைத்தால், உடல்மொழியாலேயே சிரிக்கவைப்பார். டைட் க்ளோஸப்பில் ஷாட் வைத்தால், தன் முக பாவனைகளாலும் சேட்டைகளாலுமே ரசிக்கவைப்பார். வசன உச்சரிப்பில் பொளந்துகட்டுவார். இப்படியாகத்தான் ஒவ்வொரு படத்திலும் தன் காமெடியைப் பேசவைத்து ரசிக்கவைத்தார் நம்மையெல்லாம்!

ஹீரோ ‘பஞ்ச்’ வசனம் பேசினால் மறக்காதிருப்போம். நாம் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்போம். வில்லனே கூட ‘அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று சொன்னதை நாமும் சொல்லி ரசித்திருக்கிறோம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு நடிகர் பேசுவதெல்லாம் ‘பஞ்ச்’ வசனங்களாக, வார்த்தைகளாக அமைந்திருக்கிறதா, அமைந்துவிடுமா என்பதெல்லாம் உலக மகா அதிசயம்தான்! அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகில், அத்தனை வயதுக்காரர்களும் பாரபட்சமில்லாமல் வடிவேலுவின் ‘பஞ்ச்’ பேசாமல் ஒருநாளைக் கூட கழிப்பதே இல்லை. வட்டச்செயலாளர் வண்டு முருகனின் லொள்ளுக்கு வட்ட சதுர எல்லைகளே இல்லை!

‘தம்பி டீ இன்னும் வரல...’, ‘என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே’, ‘அவ்வ்...’, ’மாப்பூ... வச்சிட்டாண்டா ஆப்பு’, ‘முடியல...’, ‘பீ கேர் ஃபுல்... நான் என்னைச் சொன்னேன்’, ‘அது போனமாசம்’, ‘ஆணியே புடுங்க வேணாம்’, என்னது இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு’, ‘ஹலோ நான் வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேசுறேன்’, ‘லாங்ல பாத்தாத்தாண்டா காமெடியா இருப்பேன்... கிட்டத்துல பாத்தா டெரரா இருப்பேன்’, ‘இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதில்ல’, ‘எந்த விஷயத்தையும் ப்ப்ளான் பண்ணிப் பண்ணணும்’, ‘வேணாம் வலிக்குது அழுதுருவேன்’, ‘நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’,

‘ஓபனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினிஷிங்க் தான் சரியில்ல’, ‘ரிஸ்க் எடுக்கிறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’, ‘க க போ’, ‘ஷ்... இப்பவே கண்ணக் கட்டுதே..’ என்று வடிவேலுவின் காமெடி பஞ்ச்களை சொல்லிக்கொண்டே போகலாம். வடிவேலு பேசிய வசனங்கள் எல்லாமே ‘பஞ்ச்’ வசனங்கள்தான். குபீர் நகைச்சுவைதான். தமிழகத்தில், இவரின் ஏதாவது ஒரு வசனத்தை யாரோ எங்கோ எவரிடமோ சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் வடிவேலு எனும் உன்னதக் கலைஞனின் மெகா வெற்றி!

அந்தக் காலத்தில், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி படங்களுக்கெல்லாம் சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் கால்ஷீட்டுகளை வாங்கிவைத்துவிடுவார்களாம். அதேபோல், “முதல்ல வடிவேலு கால்ஷீட்டை வாங்கிருங்க” என்று ரஜினிகாந்த், இயக்குநர் பி.வாசுவுடன் சொல்ல, ‘சந்திரமுகி’ படத்தில் வடிவேலுவை புக் செய்தார்கள். வடிவேலுவும் காட்சிக்குக் காட்சி சிரிப்பு சரவெடிகளை கொளுத்திப் போட்டுக்கொண்டே இருந்தார். இயக்குநர் சுந்தர்.சி. என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ‘நாய் சேகர்’, ‘கைப்புள்ள’, என்கிற கதாபாத்திரங்களை நமக்குக் கொடுத்து, வடிவேலுவை நகைச்சுவை மருத்துவனாகவே, சோக நோயை விரட்டியடிக்கும் மருந்தாகவே ஆக்கியது தமிழ்த் திரையுலகம்.

எண்பதுகளுடன் சரித்திரப் படங்கள் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்த தலைமுறைக்கு ஒரு சரித்திரப்படம். சிம்புதேவன் வடிவேலுவைக் கொண்டு, இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வழங்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ செய்ததெல்லாம் சரித்திர சாதனை. கமலுடன் நடிப்பார். ரஜினியுடன் நடிப்பார். பிரபுதேவாவுடன் நடிப்பார். சத்யராஜ், முரளி, கார்த்திக், சூர்யா, அர்ஜுன், பிரசாந்த், கரண், அஜித், விஜய் என இன்றைய நடிகர்கள் வரைக்கும் மிகப்பெரிய ரவுண்டு வந்துவிட்டார் வடிவேலு.

தொலைக்காட்சிகளில், நகைச்சுவைக்கென சேனல்களை தைரியமாக ஆரம்பித்ததற்கு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளே ஆகச்சிறந்த நம்பிக்கையை விதைத்திருக்கும். வடிவேலுவின் உடல்மொழி அசாத்தியமானது. அவரின் நடை, ஓட்டம், நிற்பது என எல்லாமே நம்மைச் சிரிக்கவைத்துவிடும்; ரசிக்கவைத்துவிடும். ‘வின்னர்’ படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததற்கு ‘கைப்புள்ள’யே கைகொடுத்திருப்பார். ‘லண்டன்’ படத்தில் வெடிமுத்து கேரக்டரும் அப்படித்தான்!

இன்றைக்கு சமூக ஊடகங்கள் என்கிறோம். நியாயமாகப் பார்த்தால், அதற்கு வடிவேலு ஊடகம் என்றுதான் பெயர் வைத்திருக்கவேண்டும். முகநூலில், வாட்ஸ் - அப்பில், ட்விட்டரில், மீம்ஸ்களில் இன்றைக்கும் தனி நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் மெகா காமெடி நடிகர் வடிவேலு. சில வருடங்களாகவே வடிவேலு நடிக்காத நிலையிலும் கூட, திடீரென மொத்த உலகிலும் ‘நேசமணி’ வைரலானதெல்லாம் டிஜிட்டல் புரட்சி!

வடிவேலுவின் ஒவ்வொரு படத்தையும் சொன்னால், ஒவ்வொரு எபிசோடுகள்தான் வேண்டும். தமிழ்த் திரையுலகில் தனியொரு இடம் பிடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு.

இன்று செப்டம்பர் 12 வடிவேலுவின் பிறந்தநாள். அடுத்தடுத்த தலைமுறைகளையும் மன அழுத்தங்களில் இருந்து விடுவித்து சிரிக்கச் செய்துகொண்டே இருக்க வேண்டும்; ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் என நாமும் வடிவேலுவை வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in