டி.எஸ்.பாலையா எனும் நடிப்புலக பிரம்மா!

108-வது பிறந்த நாளில் சில நினைவுகள்
டி.எஸ்.பாலையா எனும் நடிப்புலக பிரம்மா!

நடிப்பு என்றாலே நாம் ஏனோ ஹீரோக்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். ‘அந்த ஹீரோ நடிப்பு சூப்பர், இந்த ஹீரோ நடிப்பு பிரமாதம்’ என்றெல்லாம் சொல்கிறோம். ஹீரோயின்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, வில்லன்களையும் சேர்த்துக்கொண்டோம். ‘நம்பியார் நடிப்பு மிரட்டலா இருக்கு; பி.எஸ்.வீரப்பா சிரிப்பே மலைப்பா இருக்கு’ என்று ஆரம்பித்து ரகுவரன், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ் என்று தொடர்ந்து, இப்போது அர்ஜூன் தாஸ் வரை சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் குணச்சித்திர நடிகர்களின் பக்கம் நாம் பெரும்பாலும் செல்வதே இல்லை. குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்த எத்தனையோ கலைஞர்கள் உண்டு.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரங்களைக் கடந்து எல்லோரையும் ஈர்த்த உன்னதக் கலைஞனாக, உணர்வு மிக்க நடிகனாக நம் எல்லோராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நம்மை ஆட்கொண்டுவிடுவார். அவர்... டி.எஸ். பாலையா.

ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லாவில் பிறந்தவர் டி.எஸ்.பாலையா. சிறு வயதிலேயே நடிப்பின் மீது நாட்டம் வந்துவிட, ஊரிலும் ஊரைச் சுற்றிலும் எங்கே நாடகம் போட்டாலும் முதல் ஆளாகப் போய் முன் வரிசையில் போய் உட்கார்ந்து ரசிப்பார். அந்த ரசிப்புத்தன்மைதான், அவருக்குள் இருக்கிற நடிப்பை உள்ளுக்குள் மெருகேற்றிக்கொண்டே இருந்தது. பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ’எந்த வேஷம் கொடுத்தாலும் இந்தப் போடு போடுறாம்பா’ என்று நாடகக் கலைஞர்களும் ரசிகர்களும் பாலையாவை வியந்து ரசித்தார்கள்.

‘பதிபக்தி’ என்ற நாடகத்தில் நடித்தார். அதுதான் அவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மருதாசலம் செட்டியார் தன் நண்பர்களுடன் சேர்ந்து, ‘மனோரமா பிலிம்ஸ்’ எனும் கம்பெனியைத் தொடங்கினார். விகடன் எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதையைப் படமாக்குவது எனத் தீர்மானித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இந்தப் படத்தை இயக்கினார். 1936-ல், இந்தப் படம் வெளியானது. படத்தின் பெயர்... ‘சதி லீலாவதி’. ஆமாம். எம்ஜிஆர் அறிமுகமான அதே படம்தான். கலைவாணர் என்.எஸ்.கே., எம்.கே.ராதா, கே.ஏ.தங்கவேலு என இந்தப் படத்தில் ஏராளமானவர்கள் அறிமுகமானார்கள். எவருமே சோடைபோகவில்லை.

முதல் படத்தில் பாலையாவுக்குக் கிடைத்தது வில்லன் கதாபாத்திரம். மிரட்டியிருப்பார். தொடர்ந்து எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், ’இரு சகோதரர்கள்’ படத்திலும் அடுத்து ‘சதி அனுசுயா’ படத்திலும் நடித்தார். மூன்று படங்களிலுமே தன் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார் பாலையா. தியாகராஜ பாகவதருக்கு வில்லனாக பாலையா நடித்த ‘அம்பிகாபதி’யையும் எல்லீஸ் ஆர்.டங்கனே இயக்கினார். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பாலையாவின் திறமையைத் திரையுலகம் அறிந்துகொண்டது அப்போதுதான்!

அதன் பின்னர் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த பாலையாவுக்கு, 1946-ம் ஆண்டு சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ’சித்ரா’ எனும் படத்தில் நாயகனாக நடித்தார். அதிலும் அவர் பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, வில்லனாக வந்த வாய்ப்பையும் விட்டுவிடவில்லை அவர். ‘நான் நடிகன். நடிக்கணும். அது ஹீரோவா இருந்தா என்ன, வில்லனா இருந்தா என்ன. நடிக்கணும், அவ்ளோதான்’ என்று தன் நண்பர்கள் கேட்டபோது பதில் சொன்னார் பாலையா. அதுதான் பாலையா எனும் உன்னதக் கலைஞனின் அடையாளம்!

எம்ஜிஆருக்கு வில்லனாக ‘ராஜகுமாரி’யில் நடித்தார். இன்னொரு படத்தில் எம்ஜிஆரும் இவருமாக இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்தார்கள். பாலையாவின் இன்னொரு சிறப்பு... ஆரம்ப காலங்களில் பல படங்களில் அவரே பாடவும் செய்தார்.

ஒருமுறை கொல்கத்தாவில் படப்பிடிப்பு. அந்தப் படத்தில் நடிப்பதற்கு எம்ஜிஆரையும் பாலையாவும் அழைத்தார்கள். ஆனால் பாலையாதான் சரியாக இருப்பார் என்று அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்ஜிஆருக்கு மன வருத்தம் தான். ஆனால், பின்னாளில் பலரிடமும், ‘பாலையாவுக்கு கொடுத்ததுதான் சரி. அவரளவுக்கு என்னால நடிக்கவே முடியாது’ என்று மனம் திறந்து சொன்னார் எம்ஜிஆர்.

அறுபதுகளில் தொடர்ந்து நிறைய படங்கள். ’மதுரை வீரன்’ படத்தில் பாலையாவின் வில்லத்தனம் ரொம்பவே ரசிக்கப்பட்டது. ‘தூக்குதூக்கி’ மாதிரியான படங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். அண்ணாவின் ‘வேலைக்காரி’ படத்தில் பகுத்தறிவுவாதியாக இவர் நடித்ததற்கு, ஏகப்பட்ட பாராட்டுகள். கூடவே காங்கிரஸ்காரராக இருந்துகொண்டு பாலையா இப்படி நடிக்கலாமா என்று வசவுகளும் கிடைத்தன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை பாலையா. கலை வேறு, அரசியல் வேறு என்பதில் உறுதியாக இருந்தார்.

’பாலையா அண்ணன் அந்த சீன்ல நடிக்கிறார்னா, நாம கொஞ்சம் கவனமாத்தான் நடிக்கணும். இல்லேன்னா மொத்தப் பேரையும் தூக்கிச் சாப்பிட்டுப் போயிருவாரு அண்ணன்’ என்று பாலையாவின் அசுர நடிப்பைக் கண்டு வியந்து, பயந்து, மலைத்துப் போய் சொன்னவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எஸ்.வி.ரங்காராவ் போல், எம்.ஆர்.ராதா போல், ஒரு காட்சியில் நடிக்கிற அத்தனை பேரையும் கடந்து நடிப்பில் ஜெயித்துக் காட்டுகிற மகா அசுரன் பாலையா!

’பாகப்பிரிவினை’ படத்தில் சிவாஜிக்குப் பெரியப்பா. ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் சிவாஜிக்கு அப்பா. இந்த இரண்டு படங்களிலும் பாலையாவின் நடிப்பு ஜாலம், நம்மைக் கவர்ந்து இழுத்துவிடும். ஜெமினியுடன் இவர் நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் பாலையா வரும் காட்சிகளெல்லாம் ரசிகர்கள் வெடித்துச் சிரித்தார்கள். காமெடியும் வில்லத்தனமும் சேர்ந்து செய்வது அன்றைக்கு பாலையாவுக்கும் தமிழ்த் திரையுலகிற்குமே புதுசுதான்!

இந்தசமயத்தில்தான் சீரியஸ் படங்களையே தந்துகொண்டிருந்த இயக்குநர் ஸ்ரீதர், கலர் படமாக, அதிலும் காமெடிப் படமாக ‘காதலிக்க நேரமில்லை’ எடுத்தார். படத்தையும் சொல்லத் தேவையில்லை; பாலையாவின் நடிப்பைச் சொல்வதற்கும் புதிதாக எதுவுமில்லை. மனிதர் கலக்கியெடுத்திருப்பார்! நாகேஷ் கதை சொல்லும் காட்சியை ஒருமுறை நாகேஷுக்காகப் பாருங்கள். நாகேஷை மட்டும் கவனியுங்கள். அடுத்தமுறை பாலையாவை மட்டும் கவனியுங்கள். பாலையா நடிப்பு ராட்சஷன் என்பதை உணர்ந்து சிலிர்ப்போம்.

பாலையாவின் உடல் மொழி எனப்படும் பாடி லாங்வேஜ் தனி ரகம். உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் பார்த்து ஒரு குதியல்; அந்தப் பக்கம் பார்த்து ஒரு குதியல். கண்களால் மொத்தக் காட்சியையும் உருட்டலிலேயே சொல்லிவிடுவார்.

போதாக்குறைக்கு அவரின் குரல். அந்தக் குரலில் என்ன மாயம் உள்ளதோ மந்திரம் உள்ளதோ... குரலில் இருந்து வரும் வார்த்தைகள், வசனங்கள் நம்மை அப்படியே திரைக்குள் கட்டிப்போட்டுவிடும். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில், கையில் வைத்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கையும் தன்னுடன் சேர்ந்து தன் சேஷ்டைகளுக்குத் தக்கபடி நடிக்கவைத்திருப்பார்.

’ஊட்டி வரை உறவு’ படத்தில் மகனிடம் கெஞ்சல், மனைவியிடம் அமைதி, கே.ஆர்.விஜயாவிடம் கோரிக்கை, நாகேஷிடம் மிரட்டல் என்று வெளுத்துவாங்கியிருப்பார் பாலையா. ‘திருவிளையாடல்’ படத்தில் கர்வம், ஆணவம், செருக்கு, திமிரின் மொத்த உருவமாகவே வரும் ஹேமநாத பாகவதராகவே வாழ்ந்திருப்பார். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இவருக்குத்தான் ‘ஒருநாள் போதுமா?’ என்று பாடியிருப்பார், நினைவிருக்கிறதா?

கே.பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலையும் பாலையாவும் எப்படி மறக்க முடியும்? ‘எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கும் நடிப்புலக பிரம்மா பாலையா’ என்று அன்றைக்குப் பத்திரிகைகளெல்லாம் கொண்டாடித் தீர்த்தன.

‘தில்லானா மோகனாம்பாள்’ என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர்களில் பாலையாவும் உண்டுதானே. மனோரமாவிடம் செய்யும் சேட்டை, பத்மினி அம்மாவிடம் பண்ணும் ரவுசு, ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் செய்யும் கலாட்டா, ‘உனக்கு சோடாக்கடைக்காரனைத் தெரியுமா? எனக்கு பீடாக் கடைக்காரனைத் தெரியும். நானும் வரேன்’ என சிவாஜியிடம் வீம்பு, ’ஒண்ணுமில்ல தம்பி, அவன் எதையோ கொடுத்தான். குடிச்சேன். பித்த உடம்பா... தூக்கிருச்சு’ என்று விவரிக்கிற அப்பாவித்தனம் என்று பாலையா, வாழ்ந்திருப்பார்.

’காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து, இயக்குநர் ஸ்ரீதரிடம் சென்றார் இயக்குநர் ஒருவர். 'ஹீரோவா யாரைப் போடப் போறீங்க?’ என்று ஸ்ரீதர் கேட்டார். ‘ரவிச்சந்திரன் கேரக்டருக்கு அந்த நடிகரைப் போடலாம்னு இருக்கேன்’ என்றார். ‘முத்துராமன் கேரக்டருக்கு யாரைப் போடப் போறீங்க?’ன்னு கேட்டேன் என்றார் ஸ்ரீதர். ‘அதுக்கு இந்த நடிகரைப் போடலாம்னு ஐடியா’ என்றார். ‘படத்துல ஹீரோ கேரக்டரை யார் செய்யப் போறாங்க?’ என்று ஸ்ரீதர் மீண்டும் கேட்டதும் ‘ஓ... நாகேஷ் கேரக்டருக்குத்தானே சார். அந்த நடிகர்தான்’ என்று சொன்னார். ‘படத்துல ஹீரோ பாலையாதான். அவர் நடிச்ச கேரக்டருக்கு யாரைப் போடப்போறீங்க? அவருக்கு பதிலா அந்த கேரக்டரைப் பண்றதுக்கு யாராவது இருக்காங்களா?’ என்று ஸ்ரீதர் கேட்க, அந்த இயக்குநர் மெளனமாகிப் போனார்.

இன்று வரைக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாலையாவின் கதாபாத்திரத்தை பிரதியெடுக்கக்கூட யாரும் பிறக்கவில்லை.

1914 ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி பிறந்தார் பாலையா. இன்று அவரின் 108-வது பிறந்தநாள். மீண்டும் அவரே பிறந்து வந்தால்தான், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்யமுடியும்.

ஈடு இணையற்ற நடிப்புலக ஜாம்பவான் பாலையாவைப் போற்றுவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in