`ஆறுதல் தேவைப்படும் நாமே ஆறுதல் சொல்லும் நிலை’: பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

`ஆறுதல் தேவைப்படும் நாமே ஆறுதல் சொல்லும் நிலை’: பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தன், பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடந்து மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், புதுமைப்பெண், சிந்து பைரவி, ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்களில். மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி உட்பட 12 படங்களை இயக்கியுள்ளார்.

பிரதாப் போத்தனின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் உடலுக்கு இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன் உட்பட ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். கமல்ஹாசன், சத்யராஜ், கவுதமி, பார்வதி, பிருத்விராஜ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், `` ‘தகரா ‘என்கிற மலையாள காவிய படத்தில் நடிகராக திரையுலகத்தில் அறிமுகமாகி, நல்ல இயக்குநராக பரிமளித்து, எளியவராய் எப்போதும் பெருத்த சிரிப்போடும் இயங்கிக் கொண்டிருந்த நண்பர் பிரதாப் போத்தன், திடீரென்று இப்பூவுலகை விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

அவருடைய திரையுலக நண்பர்கள் வட்டம் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்வார்கள். ஆறுதல் தேவைப்படுகிற நாமே அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை. நடிகர் சமூகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மரியாதையையும், ஆறுதலையும் கலங்கிய கண்ணோடு தெரிவிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in