`பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்'- கமலிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கை

`பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்'- கமலிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் வைத்த  கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் கமல்ஹாசனை இன்று சந்தித்து பேசினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 20-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் நாசர் தலைமையிலான அணி, மீண்டும் வெற்றி பெற்றது.

புதிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் பதவி ஏற்றுக்கொண்டனர். தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் 24 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். பின்னர் நடிகர் சங்க நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக, நிதி வசூல் செய்வதில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்க இருக்கின்றனர். இந் நிலையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற மே 8-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு, செயற்குழு ஒப்புதல் படி கோரிக்கை வைத்தனர். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in