ரஹ்மானை மத ரீதியாக சுருக்குவது அற்பத்தனம்! சீமான் கண்டனம்!

சீமான் மற்றும் ரஹ்மான்...
சீமான் மற்றும் ரஹ்மான்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வன்மத்தை கட்டவிழ்த்து விட வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பலரும் ரஹ்மானுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர் பணத்தை ஏமாற்றி விட்டார் என்று ஒரு சாரரும், மதத்தின் அடிப்படையிலும் அவர் மீது கருத்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு சாரர் இசை நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு ரஹ்மான் தான் பொறுப்பு எனவும் சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாங்களே முழு பொறுப்பு ஏற்பதாக தெரிவித்து இன்று முதல் கட்டமாக ஈ-மெயில் மூலமாக டிக்கெட் நகலை அனுப்பிய 400 பேருக்கு பணத்தைத் திருப்பி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திரையுலகில் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான்
சீமான்

அந்த அறிக்கையில், ‘இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ எனும் இசை நிகழ்ச்சி விழாவில் ஏற்பட்டக் குளறுபடிகளும், சிரமங்களும் வருத்தத்திற்குரியது. இடங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டக் குழப்பங்களினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டதால் நேர்ந்த பாதிப்புகளினாலும் பொதுமக்கள் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் நியாயமானது. அதனை உணர்ந்தே ஏ.ஆர்.ரஹ்மான் தார்மீக அடிப்படையில், நடந்தத் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வருந்தியிருக்கிறார்.

மேலும், இந்நிகழ்ச்சியைச் சரிவர காண இயலாது பாதிக்கப்பட்டதாக தெரிவித்தப் பார்வையாளர்களுக்கு அவர்களுக்குரிய நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானின் உளநேர்மையை வெளிப்படுத்துகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு பொது நிகழ்ச்சி குறித்தானத் திட்டமிடலையும், ஒழுங்கமைவையும் ஆழமாகக் கண்காணித்து, அதனை நெறிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும். ஏற்பாட்டாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு முழு உரிமையுண்டு.

இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களையும், அவர்களது செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறிய அரசுத்துறையைச் சேர்ந்தவர்களையும் விடுத்து, இசை நிகழ்ச்சி நடத்திய சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கச் சொல்லி குற்றப்படுத்துவது சரியானதல்ல. ஆஸ்கார் அரங்கில் நம்மை தலை நிமிரச் செய்த ரஹ்மான் மீது ஒரு சாரர் வன்மத்தை கட்டவிழ்த்து விடுவதும் அவரை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிசெயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in