படம் சொதப்பலா... சக்சஸா?- என்ன சொல்கிறது `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'

படம் சொதப்பலா... சக்சஸா?- என்ன சொல்கிறது `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'

சில வருடங்களுக்குப் பிறகு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் வடிவேலு. எப்படி இருக்கிறது படம்?

சென்னையில் நாய்களை கடத்தி உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் தொழிலை செய்து வருகிறார் நாய் சேகர் (வடிவேலு). இவரின் கேங்கில் ரெடின் கிங்க்ஸ்லி, பிரசாந்த், ஷிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். ஒருமுறை தவறுதலாக சென்னையில் இருக்கும் பிரபல தாதாவான தாஸ் (ஆனந்த்ராஜின்) நாயை வடிவேலு கடத்தி விட பிரச்சினை ஆரம்பமாகிறது. இந்த சண்டையில் ஆனந்த்ராஜை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு விடுகிறார் வடிவேலு. இந்தப் பிரச்சினையால் வடிவேலு பதற்றமடைய இந்த தொழிலை விட்டுவிடும்படி அவரது பாட்டி சச்சு அறிவுரை சொல்லி ஒரு ஃப்ளாஷ்பேக் கதையும் சொல்கிறார்.

அவரது மகனுக்கு குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு போகும்போது அங்கு ஒரு அதிர்ஷ்ட நாயை கொடுக்கிறார் சித்தர் ஒருவர். அதற்கு பிறகு குழந்தை, செல்வம் என பெருவாழ்வு கிட்டுகிறது. உண்மை தெரிந்து அந்த பைரவர் நாயை பாதுகாக்கும் மேகநாதன் அதைக் கொண்டு சென்று விட, வடிவேலு குடும்பம் செல்வம் இழந்து சென்னைக்கு குடிபெயர்கிறது. இப்போது அந்த நாய் ஹைதராபாத்தில் இருக்கிறது எனவும் அதைத் தேடிக் கொண்டு வரும்படியும் அவரது பாட்டி வடிவேலுவிடம் சொல்ல, வடிவேலு அந்த நாயை மீட்டாரா ஆனந்த்ராஜூக்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை தீர்ந்ததா என்பதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவில் வடிவேலு மற்றும் கிங்ஸ்லி
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவில் வடிவேலு மற்றும் கிங்ஸ்லி

பல வருடங்களுக்குப் பிறகு திரையில் வடிவேலு. அவரது அறிமுக காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ரீவைண்ட் விருந்துதான். தனது தேர்ந்த நடிப்பின் மூலமும் முக பாவனைகள் மூலம் ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் வடிவேலு. ஆனால், பல இடங்களில் வடிவேலுவே தன்னைத் திரையில் மீண்டும் பிரதி எடுக்க முயன்றிருப்பது அயர்ச்சியை வரவழைக்கிறது. படத்தின் முதல்பாதியில் வடிவேலு நாய் கடத்துபவர், அதிலும் பல நேரங்களில் சொதப்புபவர் என்பதை நகைச்சுவையாகக் காட்டுகிறேன் என பார்வையாளர்களை சோதித்து இருக்கிறார் இயக்குநர் சுராஜ். வடிவேலுவின் கேங் ரெடின், பிரசாந்த், சிவாங்கி மூவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ முயன்றிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் முதல் பாதியில் சிரிப்பு வருவதற்கு பதிலாக கோபமே மிஞ்சுகிறது.

ஆனந்த்ராஜின் ஒரு காமெடி ஒன்லைனர்கள் அங்கங்கே சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் நடிகர் வடிவேலுவுடன் அவர் வரும் காம்பினேஷன் காட்சிகள் நன்றாகவே வந்திருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கான இடம் இருக்கிறது. சில இடங்களில் அவை ரசிக்கும்படியும் இருக்கிறது. சிவாங்கியின் கதாபாத்திரம் கதைக்கு தேவையில்லாதது. இரண்டாம் பாதியில் ஷிவானி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை முடிந்தளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கதாநாயகி வேண்டுமே என ஒரு கதாபாத்திரத்தை வலிந்து திணிக்காமல் இருந்திருப்பது ஆறுதல். ரமேஷ் ராவும் மேக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயைப் பாதுகாக்க டெக்னாலஜி அப்டேட்டோடு பாதுகாப்பு கொடுக்கத் தெரிந்தவருக்கு வடிவேலுவுக்கு கண் தெரியுமா தெரியாதா என்பதை உறுதிப்படுத்த ஒரு கண் மருத்துவரை அழைத்து வர வேண்டும் என்று தெரியவில்லை. பாட்டி சச்சுவுக்கு காணாமல் போன பைரவர் நாய் இருக்கும் இடம் எப்படி தெரிந்தது என்பதற்கான விடை இல்லை. இப்படி படம் நெடுக பல இடங்களில் திரைக்கதையில் சொதப்பல்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஆறுதல். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவும் வடிவேலுவின் ஆடை வடிவமைப்பும் ஒப்பனையும் கவனிக்க வைக்கிறது. கதையில் எதிர்பார்த்த கிளைமேக்ஸ் முழுமையடையாத விதத்தில் கதையை முடித்து வைத்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில், வடிவேலு என்ற நடிகனுக்காகவும் வடிவேலுவுக்காகவும் எடுக்கப்பட்ட கதையில் பல இடங்களில் சொதப்பி இருக்கிறார்கள். வடிவேலு எனும் சிறந்த நடிகனையும் அவரது நகைச்சுவையும் இனிவரும் காலங்களில் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களைப் பொறுத்துதான் ரசிக்க முடியும் போலிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in