எனது தோல்வி படங்களின் எண்ணிக்கை குறைவு: காரணம் சொல்கிறார் 'ஜெயம்' ரவி

எனது தோல்வி படங்களின் எண்ணிக்கை குறைவு:  காரணம் சொல்கிறார்  'ஜெயம்' ரவி

திரைத்துறைக்கு வந்து இருபது வருடங்கள் நிறைவு செய்கிறார் நடிகர் 'ஜெயம்' ரவி. அத்துடன் இன்று அவரது 42-வது பிறந்தநாள், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது என்ற சிறப்பு சேர்ந்து கொள்ள இந்த மகிழ்ச்சியை பத்திரிக்கையாளர்களோடும் ரசிகர்களோடும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், 'என்னுடைய பிறந்தநாள் அன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்கள் உங்களைச் சந்திக்காமல் இருந்ததில் வருத்தம். இனிமேல் இதை தொடர்ந்து செய்யலாம் எனு நினைக்கிறேன். இருபது வருடங்களில் 25 படங்கள் தான் நடித்திருக்கிறேன். எண்ணிக்கையை விட நல்ல படங்கள் செய்வதை நோக்கமாக வைத்திருக்கிறேன். 'ஜெயம்' படம் வெற்றி அடைந்து 8 மாதங்கள் வீட்டில் சும்மாவே இருந்தேன். அப்போது தான் அதிக படங்கள் செய்வது முக்கியமில்லை என அப்பா சொன்னார். அது சரி என்றும் பட்டது. அதனால் தான் என்னுடைய தோல்விப் படங்களின் எண்ணிக்கை எப்போதுமே குறைவாக உள்ளது. உங்கள் விமர்சனங்கள் அனைத்ததையும் நான் கவனித்து வளர்ந்து வருகிறேன். அதனால், தான் எனக்கு தலைக்கனம் என்பதை ஏற்று கொள்ளவில்லை. என் அண்ணன் தான் என்னை வழி நடத்தி போனார். அக்காவும் எந்த விமர்சனமாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல்லி விடுவார்.

என் பள்ளிக்கால நண்பர்கள் நான்கு பேர் உள்ளனர். வாழ்க்கையில் நாலு பேர் வேண்டும் என்று சொல்வார்கள் இல்லையா? அது அவர்கள் தான். என் மகன்களுக்கும் என் வளர்ச்சியில் அவ்வளவு ஆனந்தம். இதை எல்லாம் தாண்டி என் பேபி. என் மனைவி எனக்காக வேண்டி கொள்வார். உங்கள் அனைவர் முன்னாலும் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் எல்லாருடைய அன்பும் முகத்தில் தெரிகிறது. நிறைய நல்ல படங்கள் கொடுத்து உங்களை அனைவரையும் சந்தோஷப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in