‘ஹீரோ அறைக்குச் செல்லாததால், என்னை ஒதுக்குகிறார்கள்’ - பொங்கும் கங்கனா!

தனது தாயாருடன் கங்கனா ரனாவத்
தனது தாயாருடன் கங்கனா ரனாவத்

’ஹீரோக்களின் அறைகளுக்குச் செல்வதில்லை. கிசுகிசுக்களில் சிக்குவதில்லை. இதனால் என்னை பாலிவுட்டில் ஒதுக்கிறார்கள்’ என்று பாலிவுட் கங்கனா ரனாவத் பொங்கியிருக்கிறார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேற்றும் இன்றுமாக தனது தாயாரின் புகழ் பாடி வருகிறார். பண்ணையில் பணியாற்றும் தனது தாயின் புகைப்படங்களை கங்கனா நேற்று பதிவிட்டிருந்தார். இன்று ட்விட்டரில் அது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ரசிகர்களுடன் உரையாடினார்.

“எனது தாயார் ஒரு ஆசிரியையாக பணியாற்றியவர். இப்போதும் ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் வயல்வெளியில் பணி புரிகிறார். சினிமா பார்ப்பது, வெளிநாடு செல்வது, வெளியே சாப்பிடுவது ஆகியவற்றை அறவே தவிர்த்து விடுவார். நான் அழைத்தாலும் வர மாட்டார்.

இந்த வயதிலும் தன்னுடைய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரொட்டியும் கொஞ்சம் உப்பும் இருந்தால், எவர் கையையும் எதிர்பார்க்காது வாழும் தன்னம்பிக்கையை தந்திருக்கிறார். அதனால்தான் நான் மற்ற நடிகையர் போல திருமண விழாக்களில் ஆடுவதில்லை. ஐட்டம் பாடல்களிலும் தலைகாட்டுவதில்லை. அது மட்டுமன்றி மற்றவர்களைப் போன்று ஹீரோக்களில் அறைகளுக்குப் போவதில்லை; கிசுகிசுக்களிலும் சிக்குவதில்லை. இதனால் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள். இந்த மாஃபியா சினிமா என்னை புரிந்துகொள்ளவும் கையாளவும் தடுமாறுகிறது. என்னுடைய நேர்மையும் திடமான மனப்பான்மையும் எங்கிருந்து வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும்” என்று விளக்கி உள்ளார்.

கங்கனா ரனவத் தனது ட்விட்டர் கணக்கை மீளப்பெற்றது முதல் முன்னிலும் வேகமாக களமாடி வருகிறார். முன்னதாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததன் காரணமாக அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. எலான் மஸ்க் வசம் ட்விட்டர் வந்ததும் புத்துயிர் பெற்றவர்களின் வரிசையில் கங்கனா ரனவத்தின் ட்விட்டர் கணக்கும் உயிர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in