இசை நிகழ்ச்சியில் குளறுபடி; 4,000 பேருக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார் ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் ...
ஏ.ஆர்.ரஹ்மான் ...

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளின் எதிரொலியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டிக்கெட் வாங்கியிருந்தும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படாத ரசிகர்களுக்கு அவர்களின் டிக்கெட் பணத்தைத் திருப்பி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.15,000 முதல் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்களை உள்ளே அனுமதிக்காமல் போனது, முறையற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் என கடந்த சில நாட்களாக இந்தப் பிரச்சினை கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திட்டமிட்டு அனுமதி வாங்கிய எண்ணிக்கையை விட அதிக மக்களை உள்ளே விட்டது, கட்டுடங்காத கூட்டம் போன்ற காரணங்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட ஏசிடிசி நிறுவனம் சார்பாக சொல்லப்பட்டது. டிஜிபி உத்தரவை அடுத்து தாம்பரம் காவல் துறை நேரில் சென்று ஆய்வு நடத்தியது.

இதனை அடுத்து பல தரப்பினரும் இதற்கு ரஹ்மான் தான் காரணம் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க, தாங்கள் இதற்கு பொறுப்பேற்பதாகவும் ரஹ்மானை குற்றம் சாட்ட வேண்டாம் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி காட்சிகள்...
ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி காட்சிகள்...

இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்திருந்த ரஹ்மானுக்கு திரையுலகிலும் ஆதரவுக் கரம் நீண்டது. மேலும், டிக்கெட் வாங்கியும் தவிர்க்க முடியாத சூழலால் உள்ளே வர முடியாத நிலைக்கு ஆளானவர்கள் டிக்கெட் குறித்த விவரங்களை தெரிவித்தால் குறையை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து இருந்தார்.

அந்தப் பணி இப்போது தொடங்கியுள்ளது. இ-மெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என டிக்கெட் நகலை அனுப்பி புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை கிளம்ப துவங்கியதுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாதவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பியளிக்க ரஹ்மான் முடிவு செய்து, டிக்கெட் நகலை அனுப்பி வைக்கும் படி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in