
இன்றைய தலைமுறை இளசுகளின் டிரெண்டிங் ஸ்டார் அனிருத். 'வொய் திஸ் கொலவெறி' பாடலில் துவங்கிய அனிருத்தின் ஆட்டமும், பாட்டும் 'காவாலா' வரை திரும்பும் இடமெல்லாம் அதிர்கிறது. நடிகர் சிம்புவுக்கு பின், அதிக நடிகைகளுடன் சர்ச்சைகளிலும் சிக்கிய அனிருத்தின் இந்த 12 வருட இசைப்பயணத்தின் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பார்க்கலாம்.
* கே.சுப்பிரமணியம், பத்மா சுப்ரமணியம் எனத் திரைத் துறையிலும், கலைத் துறையிலும் கோலோச்சிய கலைஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் அனிருத்.
* நடிகரும், அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்தர், நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனர். குடும்பத்தில் இசையோடு துறுதுறுவென வலம் வந்த அனிருத்தின் இசையார்வம் தனுஷை கவர, அவருக்கு விலையுயர்ந்த கீபோர்ட் ஒன்றைப் பரிசளித்தார். தனது '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி, மகிழ்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்.
* புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசை கற்று தேர்ச்சி பெற்ற அனிருத், ஒலிப்பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றுள்ளார்.
* '3' படத்தின் 'வொய் திஸ் கொலவெறி' பாடல் சர்வதேச அளவிலும் புகழ்பெற்று பல சாதனைகளைப் படைத்தது. அந்தப் படத்தின் மற்றப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக படம் வெளிவரும் முன்பே பிரபலமானார் அனிருத்.
* ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி கதாநாயகர்களுக்கு, அனிருத் இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழில் மிகப்பிடித்த இசையாக தர்புகா சிவாவின் பாடல்களை சொல்வார். குறிப்பாக, 'எனை நோக்கி பாயும் தோட்டாவில்' விசிறி பாடல் இசை மீது பொறாமையே உண்டு என்பார் சிரித்துக் கொண்டே.
* எதிர்நீச்சல் படத்தில், அடி... பாடலில் தொடங்கி இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லியோ' படப் பாடல் வரை பாடகராகவும் அனிருத்தின் குரல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த இன்னொரு கிஃப்ட். பாடல்கள் மட்டுமல்லாது, 'டாக்டர்', 'விக்ரம்', 'பீஸ்ட்' என பின்னணி இசையிலும் அனிருத் கில்லி.
* சமீபத்தில் 'ஜெயிலர்' பட வெற்றி விழாவில் அனிருத்தின் இசையை பாராட்டிய ரஜினி, 'சுமாரான 'ஜெயிலர்' படத்தைத் தூக்கி விட்டது அனிருத்தின் இசைதான்' என வெளிப்படையாகப் பேசினார். அனிருத்தை தனக்கு மகன் போல எனச் சொல்லி கட்டி அணைத்து முத்தமும் கொடுத்தார்.
*முன்னணி கதாநாயகர்களின் மாஸூக்கு ஏற்றவாறும், கதைக்களத்திற்கு ஏற்றவாறும் டிராக் பிடிப்பதில் அனிருத் எப்போதும் மாஸ்.
'இந்தியன்2', 'லியோ', 'விடாமுயற்சி', 'தலைவர் 170' என தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் முதல் சாய்ஸ் அனிருத் தான். திரைத்துறைக்கு வந்த குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் சாதனைகள் படைத்து வரும் அனிருத்துக்கு காமதேனு வாசகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!