இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு திடீர் பதவி!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு திடீர் பதவி!

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இசைஞானி இளையராஜா ஒரு ஆங்கில புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் இளையராஜா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு எதிரான ஆட்சேபிக்கத்தக்க கருத்து கூறியவர்களை கடிந்து தனது கண்டனத்தை வெளியிட்டார்.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு எம்பி பதவியை வழங்கியுள்ளது. மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குயடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா என்றும் உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றும் எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து சாதனைகளை செய்தவர் இளையராஜா என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

"மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துகள்" என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in