இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை!

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை!
இளையராஜா

இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

இளைஞானி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி வருகிறது” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், “இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது” என்று தீர்ப்பளித்திருந்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை. தனி நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான சட்டப்பிரிவு 14-ல் பதிப்புரிமை என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார்.

இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு பிரத்யேகமான உரிமையாகும்” என்று எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.